×

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு 7 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம்: விளைநிலங்களை தர மாட்டோம் என முழக்கம்

சேலம்: பெட்ரோலிய எண்ணெய் குழாயை விளைநிலைங்களில் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து 7 மாவட்ட விவசாயிகள் சேலத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.  பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர்- பெங்களூரு தேவனகுந்தி வரை பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் ஐடிபிஎல் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களில் குழாய்களை பதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த  அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பினர், சேலத்தில் உள்ள ஐடிபிஎல் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் 7 மாவட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில்ஊர்வலமாக நிலம் கையப்படுத்தம் அலுவலகத்துக்கு சென்று மனு அளிக்க முயன்றனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகளும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் அங்கு வந்து மனுக்களை பெற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.  

இதையடுத்து ஐடிபிஎல் திட்ட நிலம் கையகப்படுத்தும் தனி துணை கலெக்டர் முத்தரசி, சேலம் கோட்டாட்சியர் மாறன், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்க மாட்டோம் என ஆட்பசனை தெரிவிக்கும் மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். முன்னதாக, ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், விளை நிலங்களில் எண்ணெய் குழாய் திட்டத்தை  செயல்படுத்தக்கூடாது. மாற்று வழியில் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

Tags : District Farmers ,Opposition , Opposition, oil pipeline, Struggle, fruits
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...