சேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் வடமாநில தம்பதி உட்பட 3 பேர் கொடூர கொலை: பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கேரளாவில் சுற்றிவளைப்பு

சேலம்: சேலம் அருகே வடமாநில இளம்பெண்ணை நள்ளிரவில் பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் கணவன், 15 வயது சிறுவன் தடுத்ததால் மூவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.  சேலம் அருகே பெருமாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளி பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா ராகேஷ் நகரை சேர்ந்த ஆகாஷ்(29), மனைவி வந்தனாகுமாரியுடன் (25) தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. ஆகாஷின் சித்தப்பா மகன் சன்னிகுமார்(15) இவர்களுடன் தங்கியிருந்தான். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்குள் வந்தனாகுமாரியும், சிறிது தூரத்தில் ஆகாஷ் மற்றும் சன்னிகுமாரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த இரும்பாலை போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் ஆகாஷ், அவரின் நண்பரான வினோத் என்பவரை தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேர்த்துள்ளார். அவர்கள் ஒன்றாக வேலை செய்து வந்த நேரத்தில் ஆகாஷ் அவர்களின் ஊரைச்சேர்ந்த வந்தனாகுமாரியை காதலித்துள்ளார். இதையடுத்து காதலர்களை வினோத் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளார். ஊரில் இருந்து வந்தனா குமாரியை அழைத்து வந்து சேலம் சித்தர் கோயிலில் வைத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஆகாஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.பின்னர் தங்கராஜுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த ஆகாஷ், மனைவியுடன் வேலைக்கு சென்று வந்தார். ஓராண்டுக்கு முன் வேலையில் இருந்து விலகிய வினோத், நண்பர்கள் அஜய், சுராஜ், தினேஷ் ஆகியோருடன் கடந்த 7ம் தேதி சேலத்துக்கு வந்து மீண்டும் வெள்ளிப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்துள் ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். போதை ஏறியதும் வந்தனா குமாரியை பலாத்காரம் செய்ய முடிவு செய்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். தூங்கி கொண்டிருந்த வந்தனா குமாரியை பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர் அலறவே வீட்டு உரிமையாளர் பார்த்துவிடுவாரோ என பயந்த வினோத்தும் நண்பர்களும் சேர்ந்து வந்தனா குமாரி கழுத்தை அறுத்துள்ளனர். மனைவியின் அலறல் கேட்டு தடுக்க முயன்ற ஆகாசையும், சிறுவன் சன்னி குமாரையும் அவர்கள் பிடித்து கழுத்தை அறுத்துள்ளனர். இதில் மூன்று பேரும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த பின்னரே 3 பேர் படுகொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது.

கொலையாளிகள் கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் சுற்றி வருவது அவர்களது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காலை பாலக்காட்டிற்கு சென்று வினோத்,அஜய், சுராஜ் ஆகியோரை கைது செய்து, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  தப்பியோடிய கூட்டாளி தினேசை தேடி வருகின்றனர்.

Related Stories:

>