×

சென்னையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

பெரம்பூர்: சென்னையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் அமைத்தால் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு குறைவதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகளில் நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களின் கீழ் பகுதியில் சில இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காலியாகவே உள்ளது. இதனால், குப்பை கொட்டும் இடமாகவும், குடிமகன்கள், ஆதரவற்றோர் அடைக்கலமாகவும் மாறியுள்ளது. மேலும், கடை வைத்திருப்போர் தங்களது பொருட்களை வைக்கும் இடமாகவும், டிராவல்ஸ் நடத்துவோர் பார்க்கிங் பகுதியாகவும் பயன்படுத்துகின்றனர்.

சென்னையில் சாலையோரம் உள்ள 90 சதவீத கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். எனவே, இந்த மேம்பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள இடங்களில் பார்க்கிங் அமைத்தால், சாலை ஆக்கிரமிப்புகள் குறைவதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மண் மற்றும் கட்டிட கழிவுகளை குவித்து வைத்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிலர் இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குடும்பம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் மதுபானம் மற்றும் கஞ்சா அடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னையில் தற்போது போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்னையில் உள்ள  மேம்பாலங்களின் கீழ் பகுதியை பார்க்கிங் பகுதியாக மாற்றலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Chennai ,Chennai: Public Emphasis ,Lower Part , Chennai, Fairs, Lower Area, Parking Facility, Public
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...