×

வாலிபர் மர்ம மரணத்தில் திருப்பம் ஏரியில் மூழ்கடித்து கொன்றது அம்பலம்

* மக்கள் நீதி மய்ய நிர்வாகி உள்பட 3 பேர் கைது
* கர்ப்பிணியையும் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி: மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த லிப்ட் ஆபரேட்டர் லிட்டில் ஜான் (எ) ஹென்றி (38) என்பது தெரியவந்தது. உறவினர்கள் நேரில் பார்த்து உறுதி செய்தனர். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் காணாமல் போயிருப்பதால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, சுகுமார், இளங்கனி, கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஏரி அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று 3 பேர் ஆட்டோவில் ஹென்றியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ பதிவு எண்ணை வைத்து பார்த்ததில் அந்த ஆட்டோ மேடவாக்கம், ராமைய்யா நகர், நேரு தெருவை சேர்ந்தவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளருமான சேவியர் அருள் (45) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில், ஹென்றியை ஏரியில் தள்ளி கொலை செய்ததாக கூறினார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:
எனக்கும் ஹென்றிக்கும் மது அருந்தும்போது பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர் கழுத்தில் இருந்த செயினை திருடுவதற்காக நைசாகப் பேசி சித்தாலப்பாக்கம் ஏரிக்குச் சென்று மது அருந்தலாம் என கூறி ஆட்டோவில் ஏற்றிசென்றேன். உடன் எனது மகன் மைக்கேல் விஜய் (19), எனது நண்பர் பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பு 10வது தெருவை சேர்ந்த அமல்ராஜ் (32) ஆகியோரை அழைத்து சென்றேன். 4பேரும் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினோம். அப்போது ஹென்றிக்கு அதிக மது கொடுத்தோம். அவருக்கு போதை தலைக்கேறியபோது, செயினை பறித்துக்கொண்டு, ஏரியில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்தோம். பின்னர், அங்கிருந்து சென்று விட்டோம். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது, “திருவண்ணாமலை மாவட்டம், சங்கத்தை சேர்ந்த சபானா (23) என்பவர், சிறு வயதிலேயே அப்பா, அம்மா இறந்து விட்டதால் தனிமையில் வாழ்ந்து வந்தார். இவர், சில மாதங்களாக மேடவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது எனது மகன் அங்கே ஆட்டோ சவாரிக்கு சென்றபோது அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகினர். இதில், அவர் கர்ப்பமாகினார். பின்னர், என்னிடம் வந்து உங்களது மகனை திருமணம் செய்து வைக்க வேண்டும், என வற்புறுத்தினார். ஆனால் எனக்கு அவரை திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை. அதனால் அந்தப் பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தன்று அந்த பெண்ணை திருமணம் சம்பந்தமாக பேசலாம் வா என எங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சித்தாலப்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்றேன்.

அங்கு, எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை தாக்கி, கைகளைக் கட்டி ஏரியில் வீசி விட்டு வந்து விட்டோம்” என அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த கொலை வழக்கில் சேவியர் அருள், அவரது மகன் மைக்கேல் விஜய் மற்றும் அவரது நண்பர் நண்பர் அமல்ராஜ்  ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் நகை ஒரு சவரன் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகள் சம்பந்தமாக மூன்று பேரையும் நேற்று மாலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : death ,lake , Plaintiff, mysterious death, lake, ambush
× RELATED சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை