×

தனியார் கம்பெனிகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு, குப்பை தீவைத்து எரிப்பு: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

புழல்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், செட்டிமேடு, சின்னதோப்பு, பாயசம்பாக்கம், கிராண்ட் லைன், புள்ளிலைன், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தனியாருக்கு சொந்தமான குடோன்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக கெமிக்கல், ஆயில், பெயின்ட் குடோன்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில், இந்த குடோன்களின் குப்பை மற்றும் ரசாயன கழிவுகள் உரிய முறையில் அகற்றாமல் பல மாதங்களாக குவித்து வைக்கப்பட்டு, காலியான இடத்தில் வைத்து தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால், கரும்புகை வெளியேறி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுகிறது.

இதனால், சுற்றுப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, இதுபோன்று ரசாயன கழிவுகள் மற்றும் குப்பையை விதிமீறி எரிக்கும் குடோன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்குன்றம் அடுத்த பாயசம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் குடோனின் ரசாயன கழிவுகள் மற்றும் குப்பைகள் அருகில் உள்ள காலி இடத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை, நேற்று குடோன் ஊழியர்கள் தீவைத்து எரித்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிக்குள்ளாகினர். தொடர்ச்சியாக இப்பகுதியில் ரசாயன கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்கவும், குப்பை கழிவுளை முறையாக அகற்றாத நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.   

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தனியார் குடோன்களின் ரசாயன கழிவுகள் அடிக்கடி தீவைத்து எரிப்பதால், நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதே இல்லை. மேலும், இங்குள்ள பல குடோன்களில் கெமிக்கல் மற்றும் ஆயில் பதுக்கி வைக்கப்படுகிறது. அதில் கசிவு ஏற்பட்டால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் தனியார் குடோன்களை மூடி சீல் வைத்து உரியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : companies ,suffocation , Private Company, Chemical Waste, Garbage, Fire Burners, People
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது