×

மாநிலங்களவை எம்பி தேர்தல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மனுதாக்கல் செய்தனர். பின்னர் அண்ணா, கலைஞர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைதொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என்றும், முன்னதாக மார்ச் 6ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி தற்போது அதிமுக சார்பில் 124 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுக மற்றும் கூட்டணி சார்பில் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே திமுக, அதிமுக சார்பில் தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.

திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு தலைமை செயலகம் வந்தனர். சரியாக 12.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேரும் சட்டப்பேரவை செயலாளரும் மாநிலங்களவை தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். அப்போது திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் எம்எல்ஏக்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்ததும், மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில்
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறையில் வைத்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். சட்டப்பேரவையில் என்னென்ன மக்கள் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : DMK ,MP election stall ,Rajya Sabha ,Anna Rajya Sabha ,artist ,Anna , Rajya Sabha MP election, MK Stalin, DMK candidates, brother, artist
× RELATED திமுக நிர்வாகிகளை சந்தித்து...