×

திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மற்றும் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்: கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை: திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மற்றும் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் (பெரணமல்லூர்) மறைவுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து, மறைந்த எம்எல்ஏ கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்), முன்னாள் அமைச்சரும் முன்னாள் அவை முன்னவருமான பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவையில் பேராசிரியர் க.அன்பழகன் மறைவு குறித்து சபாநாயகர் தனபால் வாசித்த இரங்கல் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரோடு அரசியலில் பயணித்தவரும், சமூகநீதிக்காகவும், மொழி உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவரும், 1957ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 9 முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும். 1962 முதல் 1967 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை திருச்செங்கோடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகவும், இப்பேரவையில் அவை முன்னவராகவும், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என துறைகளின் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர்.

திமுக பொதுச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் 7.3.2020 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.தமிழ் பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் உதித்த பேராசிரியர் க. அன்பழகன் எளிமை, அடக்கம், இரக்கம் என உயர்ந்த பண்புகளை இயற்கையாகவே தன்னகத்தே பெற்றுத் திகழ்ந்தவர். கல்லூரிப் பேராசிரியராக தன்னுடைய பணியைத் தொடங்கி, தமிழர் வாழ்வு, தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல்வேறு துறைகளை ஆழ்ந்து கற்று பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். அமைச்சராக, பேரவை முன்னவராக பேரவையில் விவாதங்களில் சூடு பறக்கும் போது தன்னுடைய ஆணித்தரமான கருத்துகளை மற்றவர்களும் ஏற்கும் வண்ணம் தெரிவித்து, இப்பேரவையை அமைதிபடுத்தி, ஜனநாயக முறையில், விதிமுறைப்படி, மரபுப்படி பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற பெரிதும் உதவியவர் என்பது அவரோடு பணியாற்றிய உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே.பேராசிரியப் பெருந்தகையின் மறைவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும்இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து காலை 10.07 மணியளவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று சட்டப் பேரவை கூட்டம் கிடையாது. மீண்டும் நாளை சட்டப் பேரவை காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து 12ம் தேதி பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை என்று பல்வேறு துறைகள் மீதான விவாதம் நடைபெறும். இதில் அந்தந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கப்படும். கூட்டம் மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது.

கொரோனா பாதிப்பு: திமுக கவன ஈர்ப்பு: தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தனர்.

Tags : KPPSamy ,Anabhakaran ,DMK ,death ,Kattavarayan ,KPP ,Prof Anbalakaan ,Sammy , DMK MLAs, KPP Swamy, Kattavarayan, Prof.
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி