×

பெரியார் குறித்து கருத்து ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழா நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பெரியார் குறித்து பேசினார். இந்த பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் கடந்த ஜனவரி 18ம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்தார். ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20ம் தேதி புகார் செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக வழக்கை நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். அதன்படி வழக்கு நேற்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆறுமுகம், இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில் வக்கீல் நமோ நாராயணன் ஆஜராகி வாதிட்டார். அதில், இந்த வழக்கில், ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யாத நிலையில், வழக்கு மனுவில் ரஜினிகாந்த் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தவறாக தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தவறு நடப்பதை அறிந்து நாங்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, விளம்பரத்திற்காகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காகவும் தொடரப்பட்டுள்ளது, எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அதே சமயம், உமாபதி தரப்பில் வக்கீல் அருண் ஆஜராகி ரஜினிகாந்த் பேச்சு குறித்து ஏற்கனவே போதிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இந்த வழக்கில் இணைவதை அனுமதிக்க கூடாது, மனுவை ஏற்று ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறி ஒத்திவைத்தார்.

Tags : Rajini ,Periyar , Periyar, Rajini
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...