ம.பி.யில் கமல்நாத் ஆட்சிக்கு ஆபத்து 6 அமைச்சர் உட்பட 17 எம்எல்ஏக்கள் தனி விமானத்தில் பெங்களூருவில் தஞ்சம்: சிந்தியாவை சமாதானம் செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்

பெங்களூரு: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் மீண்டும் பெங்களூரூவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள். இதனால் சிந்தியாவை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா அதிருப்தி அடைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஆரம்பித்தது. கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிற கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாயினர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சில் பாஜ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பா.ஜ மறுத்தது. எனினும், மாயமான எம்எல்ஏக்கள் சிலர் போபால் திரும்பினர். இந்த நிலையில், ம.பி அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தனி விமானத்தில் மீண்டும் பெங்களூரூ சென்றுள்ளனர். இவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பேச அவசரமாக டெல்லி விரைந்தார் முதல்வர் கமல்நாத்.

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து சிந்தியாவின் நடவடிக்கை குறித்து விளக்கினார். மேலும் மாநிலங்களவை எம்.பி.க்கள் நியமனம் குறித்தும் இவர்கள் விவாதித்தனர்.  அதே சமயம், அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்யா சிந்தியாவும் டெல்லி சென்றுள்ளார். இவரிடம் காங்கிரஸ் மேலிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது. சொந்த கட்சி எம்எல்ஏ.க்களையே ஜோதிராதித்யா சிந்தியா பெங்களூரூவுக்கு அழைத்து சென்று வைத்துள்ளதால், ம.பி. அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது டெல்லி பயணத்தை, பாதியில் முடித்துக் கொண்டு முதல்வர் கமல்நாத் நேற்று மாலை போபால் வந்தார்.

Related Stories:

>