×

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசனுக்கு சீட்: நத்தம் விஸ்வநாதன் ஏமாற்றம்: தேமுதிக கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் 3 பேரின் பெயரை அதிமுக தலைமை நேற்று அறிவித்தது. அதன்படி அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் கூட்டணி கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கோரிக்கையை அதிமுக நிராகரித்துவிட்டது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்கள் 3 பேரை அறிவித்து விட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்பதில் கடும் இழுபறி நீடித்து வந்தது. வரும் 13ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.

அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான தம்பிதுரை, கோகுலஇந்திரா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். அதே நேரம் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். அதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் எம்பி சீட் கேட்டு பாஜ தலைவர்கள் மூலம் அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக முதல்வரும், துணை முதல்வரும் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் முடிவெடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மதியம் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி வரும் 26ம்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், அதிமுக போட்டியிடும் 3 இடங்களில், இரண்டு இடங்களுக்கு அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அதன்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள். மற்றுமுள்ள ஒரு இடம் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எப்படியும் அதிமுக தங்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அதிமுக தலைமை தேமுதிகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதனால் பிரேமலதா, கூட்டணி குறித்து என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் தங்களுக்கு எப்படியும் ஓபிஎஸ் எம்பி சீட் வாங்கி தருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அதிமுக எளிதில் வெற்றிபெற வேண்டிய ஒரு இடத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வழங்கியுள்ளது, துணை முதல்வரின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது. அதே நேரம், பாஜவின் நெருக்கடி காரணமாகத்தான் ஜி.கே.வாசனுக்கு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாசனுக்கு எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளதால் தமாகா கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Tags : KP Munasamy ,Rajya Sabha ,AIADMK ,Thambidurai ,GK Vasan ,Naththam Viswanathan ,Natham Viswanathan , Rajya Sabha, AIADMK candidates, Thambidurai, KP Munusamy, GK Vasan, Natham Viswanathan, Demuthika
× RELATED குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே...