×

ஒப்பந்ததாரருக்கு நிலுவைத்தொகை வழங்காததால் பொதுப்பணித்துறையின் அலுவலக பொருட்கள் ஜப்தி

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆர்.கே. பேட்டை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். கடந்த 1997ல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் பொன்னை அணை மற்றும் காவேரிப்பாக்கம் அருகே பாலாறு அணை ஆகியவற்றில் 4 கோடி மதிப்பில் கட்டுமானப்பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது. இதற்கான பணிகள் 1999ல் முடிவடைந்தது.  ஆனால் குறித்த நேரத்தில் இப்பணி முடியாமல் 34 நாட்கள் தாமதமானதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு 12 லட்சம் அபராதம் விதித்தனர். இந்நிலையில் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தினர். இதுதொடர்பாக 2005 முதல் 2019 வரை நீதிமன்ற வழக்குகள் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 2020 பிப்ரவரி 24ம் தேதி ஒப்பந்ததாரருக்கு 18 சதவீதம் வட்டியுடன் நிலுவை தொகையாக  25 கோடி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணம் தரவில்லையாம். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காட்பாடி நீதிமன்ற அமீனா முருகேசன், கழிஞ்சூர் விஏஓ ரேகா ஆகியோர் முன்னிலையில் காட்பாடி காந்திநகரில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலகத்தில் இருந்து பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.  இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : contractor , Contractor, Balance, Public Works
× RELATED நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை..!!