×

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படும் பெண்கள்: கட்டி முடித்து 8 ஆண்டு ஆகியும் திறக்கப்படாத அவலம்

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கட்டி முடித்து 8 ஆண்டுகள் ஆகியும் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவறை வசதி கூட இல்லாமல் பெண் பயணிகள் மிகப்பெரிய அவதிக்குள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள எப் பிரிவு ரயில் நிலையம், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் வழியாக நாகர்கோவிலில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரயில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோட்டயம் போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஹப்பா வாராந்திர ரயில்களும் நின்று செல்கின்றன. இது மட்டுமில்லாமல் திருநெல்வேலி - மும்பை, திருவனந்தபுரம் - சென்னை ஆகிய சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.

இந்த டவுண் ரயில் நிலையத்தில் முன் பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெற முடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவார். ரயில் புறப்படும்போது பச்சைக் கொடி காட்டும் பணியையும் அவரே கவனித்து வருகிறார். ரயில் நிற்காத நேரங்களில் இந்த நிலையம் மூடப்பட்டு இருக்கும். பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் உள்ளன. இந்த நடைமேடையில் இருந்து இளைஞர்கள் கூட ரயிலில் ஏறமுடியாது. வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கு இல்லை.

இந்த ரயில் நிலையத்தில் தற்போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் நடக்கின்றன. கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2 வது பிளாட்பாரத்துக்கு செல்ல வசதியாக நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அலங்கார கற்கள் பதித்துள்ளனர். மற்ற பணிகள் மிக மந்தமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த பணிகளுக்கு தேவையான நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டவுன் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய 31-3-2010 ல், ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் ரூ. 85 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் முன் பதிவு மையம், முன் பதிவு இல்லாத டிக்கெட் வினியோக மையம், ஆண்கள், பெண்கள் கழிவறைகள், அலுவலக அறை உள்ளிட்டவை கட்டப்பட்டன.

2012 ல் இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்தன. தற்போது 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த கட்டிடத்தை திறக்க வில்லை. இந்த கட்டிடம் தற்போது பாழடைந்த பங்களா போல் காட்சி தருகிறது. டவுன் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக காலை, மாலை வேளையில் திருவனந்தபுரம் செல்லக்கூடிய ஏராளமான இளம்பெண்கள், மாணவிகள் வருகிறார்கள். பிலாஸ்பூர், இன்டர்சிட்டி, ஹப்பா ரயில்களிலும் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்திறங்குகிறார்கள். இப்படி வந்து செல்லும் பயணிகள் அவசரத்துக்கு சிறுநீர் கழிப்பதற்கு கூட இட வசதி இல்லை.

ஆண்கள் சிலர், அருகில் உள்ள புதருக்குள் சென்று விடுகிறார்கள். ஆனால் இளம்பெண்களின் நிலைமை தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. ரயில் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளுக்கு கழிவறை வசதி கூட இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளதாக பயணிகள் கூறுகிறார்கள். எனவே கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள இந்த கட்டிடத்தை திறந்து, கழிவறை மற்றும் காத்திருப்பு அறையை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனி ஊழியர்கள் நியமித்து இதை கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

மத்திய அரசுக்கு அவமானம்
ரயில் பயணிகள் ஆர்வலர் மோகன் கூறுகையில், டவுன் ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் மட்டும் குறைந்த பட்சம் 150 பயணிகள் வரை வந்திறங்குகிறார்கள். இப்படி வரும் பயணிகளுக்கு குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. கழிவறை வசதி இல்லை. இளம்பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அவர்கள் அப்பாவித்தனமாக கழிவறை இருக்கிறதா? என கேட்பது பரிதாபமாக இருக்கும். நாங்களும் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கட்டிடத்தை திறந்து கழிவறை வசதியாவது செய்து கொடுங்கள் என கோரிக்கை வைத்தோம். ஆனால் தண்ணீர் வசதி இல்லை. சுத்தப்படுத்த பணியாளர் இல்லை என பதில் தருகிறார்கள். தூய்மை இந்தியா என கூறி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் மத்திய அரசால், ஒரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கழிப்பிட வசதியை கூட செய்ய முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். மத்திய அரசுக்கு தான் இது மிகப்பெரிய அவமானம் ஆகும் என்றார்.

வருடத்துக்கு ரூ3 கோடி வருமானம்
பிலாஸ்பூர், ஹப்பா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில்கள் டவுன் ரயில் நிலையம் வழியாக செல்வதால், தற்போது வருமானம் அதிகரித்துள்ளது. வருடத்துக்கு ரூ.3 கோடி வரை வருமானம் வருகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் இதை விட குறைந்த வருமானம் வரும் ரயில் நிலையங்களில் கூட கழிவறை, குடிநீர் வசதி உள்ளது. ஆனால் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை திட்டமிட்டு அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Women ,toilet facilities ,Nagercoil Town Railway Station ,completion , Toilet facilities and women in Nagercoil
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...