×

ஐகோர்ட் உத்தரவுபடி புண்ணால் பாதிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் ஜமீலா யானை திருச்சி யானைகள் காப்பகம் வந்தது

மண்ணச்சநல்லூர்: புண் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் ஜமீலா யானை ஐகோர்ட் உத்தரவின்படி திருச்சி யானைகள் காப்பகம் கொண்டுவரப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் வனப்பகுதியில் சுமார் 250 ஏக்கரில் யானைகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்தாண்டு மதுரையில் வளர்க்கப்பட்ட ஒரு யானை பாகன் இறந்துவிட்டதால் இங்குள்ள காப்பகத்தில் விடப்பட்டது. இதேபோல் 21 வயதான ஜெயந்தி, 35 வயதான இந்து, மல்லாட்சி ஆகிய யானைகளும் இங்கு விடப்பட்டுள்ளன. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வளர்க்கப்பட்ட 44 வயதான சந்தியாவுக்கு காலில் புண் ஏற்பட்டதால் சமூக ஆர்வலர் முரளி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி சந்தியா யானை கடந்தாண்டு திருச்சி யானைகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து விடப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா,  பொட்டல்புதூரில் சையது மொய்தீன்(55) என்பவர் வளர்த்து வந்த யானைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததாலும், பின் பக்க காலில் ஆறாத புண் ஏற்பட்டதாலும் யானை அவதிப்பட்டு வந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட் உத்தரவின்படி 60 வயதான யானை ஜமீலா இன்று திருச்சி யானைகள் காப்பகத்தில் கொண்டுவந்து விடப்பட்டது.

யானைகள் பூங்கா
மாவட்ட வள அலுவலர் சுஜாதா கூறுகையில், கடந்தாண்டு 4 யானைகள் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி வறட்சியான பகுதியாக இருப்பதால் தமிழக அரசு 5 போர்வெல்களை அமைத்தது. யானைகள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு தீவனமாக நாணல், கரும்பு, காய்கறி, அரிசி வகை உணவுகள் என ஒரு யானைக்கு தினமும் தலா 260கிலோ தீவணம் வழங்கப்பட்டுவருகிறது. சந்தியா யானைக்கு தொடையில் புண் இருந்தது. டாக்டர்கள் பராமரிப்பில் யானை குணமடைந்தது.

ஏற்கனவே 5 யானைகள் உள்ளது. அவைகள் நன்கு ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக விளையாடிவருகிறது. தற்போது புதிதாக 6வதாக ஜமீலா யானை வந்துள்ளது. அரசு அனுமதித்ததால் வண்டலூர் பூங்கா போல் இங்கும் பொதுமக்கள் பார்வையிட வன விலங்கு பூங்கா அமைக்கப்படும். இதற்காக உரிய அனுமதி கேட்டு அரசு உத்தரவுக்காக எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trichy Elephant Archive , Ambasamudram, Jameela Elephant, Trichy Elephants Archive
× RELATED வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக...