×

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ மற்றும் வனவிலங்குகள் வேட்டையை தடுக்க ரூ.9.6 லட்சத்தில் ட்ரோன் எனப்படும் கண்காணிப்பு கேமரா வாங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் நவம்பர் துவங்கி 3 மாதங்களுக்கு நிலவும் உறைபனி காரணமாக, வனங்கள் பசுமை இழந்து காய்ந்து காணப்படும். இதனால் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கும். இந்த சமயங்களில் காட்டுத் தீ ஏற்படாத வண்ணம் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் எரிந்து நாசமாகி விடும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்ளும் பரவி சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனம் எரிந்து நாசமானது. முதுமலை புலிகள் காப்பகத்தை பொறுத்த வரை 688 சதுர கி.மீ. பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வன விலங்கு வேட்டை உள்ளிட்ட வன குற்றங்கள் தடுப்பது, காட்டுத் தீ கண்காணிப்பு போன்ற பணிகளுக்கான நிரந்தர வன ஊழியர்கள், 150க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். 17 இடங்களில் வேட்டை தடுப்பு முகாம்கள் உள்ளன.

இங்கிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், வன விலங்குகள் வேட்டை போன்றவற்றை தடுப்பதற்காகவும் ரூ.9.6 லட்சம் மதிப்பில் ட்ரோன் கேமரா வாங்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்து பார்க்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு என வாங்கப்பட்டுள்ள ட்ரோன் கேமரா மூலம் காட்டுத் தீ, பாதுகாக்கப்பட்ட வனங்களுக்குள் அத்துமீறி நுழைபவர்கள், வன விலங்குகளை வேட்டையாட முயற்சிப்பவர்களை கண்காணிக்க முடியும்.

மேலும் மனித - வன விலங்குகள் மோதல்களை தடுக்கவும் பயன்படுத்த முடியும். இந்த ட்ரோன் கேமரா 8 கி.மீ. சுற்றளவில் தரையில் இருந்து 800 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. காட்டுத் தீ ஏற்பட கூடிய சமயங்களில் எந்த பகுதியில் இருந்து காட்டுத் தீ ஏற்பட்டது? மனிதர்கள் ஏற்படுத்திய தீயா? எனவும் கண்டறியலாம். இது தவிர வனப்பகுதிகளில் காயமடையும் விலங்குகள் உள்ள இடங்களையும் கண்டறியலாம் என்றனர். தற்ேபாது இதனை பயன்படுத்தும் முறைகள் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Mudumalai Tiger Reserve Mudumalai Tiger Reserve , Mudumalai, tiger archive, wildfire, drone camera
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்துக்கு...