×

இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இங்கிலாந்து பெண்: பத்திரிகைகளுக்கு முழுபக்க விளம்பரம் கொடுத்து அசத்தல்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக - எல்ஜேபி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான நிலையை எடுத்ததால், அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் வெளியேறினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் முக்கிய எதிர்கட்சியாக இருந்தும், அக்கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார். கட்சியின் நடவடிக்கைகளை லாலுவின் மகன் ேதஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் புஷ்பம் பிரியா சவுத்ரி என்ற பெண், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தன்னை பீகார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளார். அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்சி வினோத் சவுத்ரியின் மகள். பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த இவர், லண்டனில் வசிக்கிறார். நேற்று பீகாரில் உள்ள பல இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் ஒரு முழு பக்க தனது அரசியல் பிரவேச விளம்பரத்தை வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், பீகார் மக்களுக்கான வளர்ச்சிக்கு உறுதியளித்து, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘பீகார் மக்களுக்கு வேகம் தேவை; சிறகுகள் தேவை; மாற்றம் தேவை. ஏனென்றால் பீகார் மக்களால் மட்டுமே சிறந்ததும் சிறப்பானதையும் செய்துகாட்ட முடியும். அதனால், 2020ல் பீகார் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்த ஆயத்தமாகுங்கள்’ இயக்கவும் பறக்கவும் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இணைய வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதின்படி பார்த்தால், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை மற்றும் லண்டன் பள்ளி பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தை சவுத்ரி பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் சவுத்ரி, தற்போது இந்திய மற்றும் குறிப்பாக பீகார் தேர்தலில் குதிப்பதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, புஷ்பம் சவுத்ரி கூறுகையில், ‘‘உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இருந்தாலும், பீகார் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக தொடர்கிறது. தேசிய அளவில் நாங்கள் இன்னும் கீழே இருகிறோம். வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, வேலையின்மை அதிகமாக உள்ளது. இந்த குறியீடுகளால் பீகாரில் ஒவ்வொரு நாளும் இறப்புகளுக்கு வழிவகுத்து வருகிறது. அதனால், பீகாரில் மாற்றத்தை மக்கள் கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

Tags : UK ,assembly elections ,Bihar ,assembly election ,final , This year's final, Bihar assembly election, UK woman
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி