×

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது சிபிஐ

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ராணா கபூர், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராஹீ, ராதா ஆகியோர் வெளிநாடு செல்வதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நிர்வாகச் சீர்கேடு வாராக் கடன் உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கிய யெஸ் வங்கி 5ம் தேதி இரவு ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனைதொடர்ந்து யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு ராணா கபூரின் மகள் ரோஷினி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் தப்ப முயன்ற போது மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று டிஎச்எப்எல் தலைவர் கபில் வாகவான் அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடர்பாக மும்பையில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திசான் ஹவுசிங் நிறுவனம், ராணா குடும்பத்துடன் தொடர்புடைய டாயிட் அர்பன் வென்ச்சர்ஸ் ஆகிய அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில் சிபிஐ.,யும் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல துறைகளில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Rana Kapoor ,CBI ,Yes Bank , Yes Bank Founder, Rana Kapoor, Overseas, Look Out Notices, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...