×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீ பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கருடாழ்வார் சன்னதி அருகே தீப்பிடித்ததில் பிரசாத ஸ்டால்  எரிந்து நாசமானது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகருகே இருந்த இ-உண்டியல், ஏடிஎம் இயந்திரங்கள் தப்பின. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுமுழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு பெற்றது. பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் தினமும் ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், வடை, முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படும். இரவு 9 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும்போது, பிரசாத ஸ்டால்களும் அடைக்கப்படும். வழக்கம்போல் நேற்றிரவு 9 மணிக்கு கோயில் நடை சாற்றப்பட்டதும், பிரசாத ஸ்டாலும் அடைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் விஸ்வரூப தரிசனத்துக்காக அதிகாலை 4 மணி அளவில் பட்டர்கள், கோயில் ஊழியர்கள் வந்து கோயில் நடையை திறந்தனர்.

அப்போது கருடாழ்வார் சன்னதி அருகே உள்ள பிரசாத ஸ்டால் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. மண்டபம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததை பார்த்த பட்டர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஸ்டாலில் தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஸ்டாலில் இருந்த பிரசாதங்கள் கருகியது. மேல இருந்த மின்சார விளக்குகள், ஒயர்கள் கருகின. மண்டபம் முழுவதும் கரும்புகை படிந்துள்ளது. தீவிபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடைசெய்யப்பட்டது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பிரசாத ஸ்டாலின் அடுத்திருந்த கோயில் இ-உண்டியல், ஏடிஎம் இயந்திரங்கள் தப்பின.

அதிலிருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகளும் தப்பியது. தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கோயிலில் இரவு நடை சாற்றும்போது கோயில் மற்றும் பிரசாத ஸ்டால்களில் சாம்பிராணி காட்டுவது வழக்கமாம். இதனால் நேற்றிரவு சாம்பிராணி காட்டிய தூபகாலிலிருந்து தீ பரவி தீப்பிடித்ததா அல்லது மின்கசிவால் தீப்பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாதர் கோயிலில் தீப்பிடித்ததால் அதிகாலையே விஸ்வரூப தரிசனம் காண குவிந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Srirangam Ranganathar Temple Fire , Srirangam Ranganathar temple, fire offering stall, burnt down
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீ...