×

சிஏஏ போராட்டத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற வேண்டும்: உ.பி. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்: சிஏஏ போராட்டத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற வேண்டும் என உ.பி. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் திடீரென கலவரமாக வெடித்தது. அப்போது, வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டனர். ரூ.1.55 கோடி அளவுக்கு பொதுச்சொத்தை சேதப்படுத்திய அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர்களிடம் இழப்பீடு கேட்டு போட்டோவுடன், லக்னோ நகரின் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை முன்பும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றில், சிஏஏ போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களின் முகவரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது போராட்டக்காரர்களின் புகைப்படத்தை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என தனது கண்டனங்களை தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்கள் தான் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுதல் முறையல்ல. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் இதே காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் போது குறிப்பாக இவர்களை மட்டும் புகைப்படம், முகவரி வெளியிட்டு பொது இடங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதற்கான நியாயப்பாடுகளை அரசு வழங்க முடியாது. மேலும் இது தொடர்பாக தலைமை வழக்கறிஞர் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறிவிட்டார் என்று கூறி, பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : CAA ,UP High Court ,Protesters ,Allahabad ,HC Orders Removal , CAA, Protest, Uttar Pradesh, Banner, Allahabad High Court
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்