×

பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுத்தேர்வு எழுத 10 கிமீ நடந்து செல்லும் மாணவர்கள்: வேப்பனஹள்ளி அருகே பரிதாபம்

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளியிலிருந்து நாடுவனப்பள்ளி வழியாக வி.மாதேப்பள்ளி செல்லும் சாலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் 10 கி.மீ நடந்து சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளி, வி.மாதேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், வேப்பனஹள்ளி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இக்கிராமங்களிலிருந்து வேப்பனஹள்ளி செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.

இதை தொடர்ந்து, சாலையை சீரமைக்க கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வி.மாதேப்பள்ளி, பாறைக்கொட்டாய், தாசிரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் சிறு பாலங்கள் கட்டுவதற்காக குழிகள் வெட்டப்பட்டன. இதனால், இவ்வழியே இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வுகள் நடந்து வருவதால் வி,மாதேப்பள்ளி, தாசிரிப்பள்ளி, பாறைக்கொட்டாய், நாடுவனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 6 முதல் 10 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று தேர்வெழுதி வருகின்றனர்.

குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் ஓட்டமும், நடையுமாக செல்லும் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால், முழுக்கவனத்துடன் தேர்வெழுத முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : elections ,Vepanahalli ,Veppanahalli , Veppanahalli, buses, general elections, students, pity
× RELATED சிங்கப்பூரில் இன்று பொதுத்தேர்தல்