×

போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்: மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை கருத்து!

கொல்கத்தா: போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள ரபின்திர பாரதி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தில் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகிறார்கள். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கம்? பெண்கள் இப்படி இருந்தால், அவர்களுடன் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும்.

இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும், என கூறினார். சர்வதேச மகளிர் தினத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தன. இந்த நிலையில், திலீப் கோஷின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதலில் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாக உள்ளாரா என்பதை அறிய வேண்டும். அவர் ஒரு நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான மனிதர். இத்தகைய நபரை மாநில தலைவராக்கியது, பாஜகவின் தரத்தை காட்டியுள்ளது. மேற்குவங்க மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.


Tags : Dilip Ghosh ,Bengal ,BJP ,West Bengal BJP , Drugs, Women, protest , West Bengal, BJP, Dilip Ghosh
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...