×

செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்: அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்யாறு: செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்யாறு நெல் மண்டி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம், அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் ஏ.அருணகிரி தலைமை தாங்கினார். மூத்த வியாபாரிகள் ஏ.காளத்தி, வி.ஆர்.தேவேந்திரன், ஆர்.விஜயராகவன், பி.என்.சத்தியமூர்த்தி  பி.லோகநாகன், பி.ஆர்.ரவீந்திரன், டி.குமாரசாமி முன்னிலை வகித்தனர்.

நெல் மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் பி.உமாபதி வரவேற்றார். செயலாளர் கே.இ.ராமலிங்கம் வரவு, செலவு கணக்குகள் மற்றும் தெப்பல் விழா கணக்குகளை தாக்கல் செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: செய்யாறு மார்க்கெட் பகுதியில் கூடுதலாக பஸ் நிலையம் செயல்படுத்துவது, செய்யாறு வழியாக கோவை,  மதுரை, கும்பகோணம், நாகப்பட்டினம்,  மகாபலிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும், கும்பகோணம், ஒகேனக்கல், மேல்மருவத்தூர் செல்லும் பஸ்களை மீண்டும் இயக்க செய்யாறு பணிமனை மேலாண் இயக்குநரிடம் முறையிடுவது, கடலூர், சிதம்பரம், சீர்காழி, திருநாள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

செய்யாறு மார்க்கெட் பகுதியில்  அனைவருக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோருவது, செய்யாறு நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யாறு தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் ஏ.வி.ராமநாதன் நன்றி தெரிவித்தார். முன்னதாக, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் அனைத்து வியாபாரிகள் வேண்டுகோளுக்கிணங்க, ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் தொடர்ந்து நீடிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Tags : routes ,Merchants Association , seiyyaru , bus, Merchants Association, insist
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்