×

கீழ்பென்னாத்தூர் அடுத்த கத்தாழம்பட்டில் மாசடைந்த கிணற்றை தூய்மை செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தில் மாசடைந்த கிணற்றை தூய்மை செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த கிணறு மாசடைந்ததால் கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

மேலும், கத்தாழம்பட்டு கிராமத்தில் குடிநீர் தேவை அதிகரித்ததால், கிணற்றின் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதிதாக அமைத்து பயன்படுத்தி வந்தனர். இதற்கு ஏரியின் அருகே உள்ள கிணற்றில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் எடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி மின்தடை, மின்மோட்டார் பழுதால் குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பாழடைந்துள்ள கிணற்றை தூய்மை செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும், கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kattabhambaram ,Kilpennathur , Kilpennathur, well, public, demand
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில்...