×

2018 மே மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி வேளாண்மை விரிவாக்க அதிகாரி தேர்வில் புதிய ‘சர்ச்சை’: சேலம், சென்னையில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் தேர்ச்சி

நெல்லை: டிஎன்பிஎஸ்சி நடத்திய வேளாண்மை அதிகாரி தேர்வில் சேலம், சென்னை ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அதிகம் பேர் தேர்வு பெற்றதாக புகார் எழுந்துள்ளது. வினாக்களும் கைடுகளில் இருந்து கேட்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 192 வேளாண்மை விரிவாக்க அலுவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2018ம் ஆண்டு மே 3ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக ஜூன் 2ம்  தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான தேர்வு ஜூலை 14ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை ஆகிய 7 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரண்டு நிலைகளையும், நேர்முகத்தேர்வையும் உள்ளடக்கியது. தாள் 1 வேளாண்மை பாடத்திலும், தாள் 2 பொது அறிவு பகுதியிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுடன் சேர்த்து புதிதாக 131 காலி பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதன் மூலம் மொத்த காலியிடங்கள் 323 ஆக உயர்ந்தது.

அதாவது 2015 முதல் 18 வரையில் 192 காலியிடங்களும், 2018-19ல் 131 காலியிடங்களும் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போதே இந்தத் தேர்வில் சேலம், சென்னை மையத்தில் தேர்வு எழுதியவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றனர். 1:2 என்ற அடிப்படையில் 637 பேர் கொண்ட தேர்வு பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் தேர்வு எழுதிய 202 பேரும், ெசன்னை மையத்தில் தேர்வு எழுதிய 156 பேரும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றனர். அதாவது சுமார் 50 சதவீதம் பேர் இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள். மற்ற எந்த தேர்வு மையத்திலும் தேர்வு எழுதியவர்கள் 100ஐ கூட எட்டவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜன.2ம் தேதி முதல் 4ம் தேதி வரையும், 7, 8ம் தேதிகளிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இறுதியாக 317 பேர் கொண்ட தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் சேலம் மையத்தில் தேர்வு எழுதிய 99 பேரும், சென்னை மையத்தில் தேர்வு எழுதிய 81 பேரும் இடம் பெற்றவர். அதாவது 323 மொத்த காலியிடங்களில் 180 பேர் இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையில் 56 சதவீதம் பேர் இந்த இரண்டு மையங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் தேர்வு எழுதியவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து போட்டித் தேர்வாளர்கள் கூறுகையில், ஏற்கெனவே குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்று முதல் 100 இடங்களை பிடித்தனர். இதன் மூலம் முறைகேடு வெட்ட வெளிச்சமானது. இதைத் தொடர்ந்தே குரூப் 2 தேர்வு முறைகேடும் தெரியவந்தது. அதற்கு பின்னரே விசாரணை நடத்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வேளாண்மை விரிவாக்க அலுவலர் தேர்விலும் சேலம், சென்னை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இந்தத் தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற அச்சம், சந்தேகம் தேர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்தும் தேர்வாணையம் அல்லது தற்போது டிஎன்பிஎஸ்சி வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி உரிய முறையில் விசாரித்தால் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இளைஞர்களின் எதிர்காலம் கருதி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னிச்சையான அமைப்பு என்று அரசு கூறி வந்தாலும் அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தேர்விலேயே குளறுபடி
வேளாண்மை விரிவாக்க அலுவலர் தேர்வு நடந்து முடிந்த உடனேயே பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் ஒரு கைடில் இருந்து கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதாவது தனியார் கைடுகளில் இருந்த வினாக்களை அப்படியே காப்பி அடித்து கேட்டதாக தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி தயாரிக்கும் கேள்விகள் தலைசிறந்த நிபுணர்களை கொண்டு தயாரிக்கப்படும். அதன் பிறகே அந்தக் கேள்விகள் தேர்வுக்கு தேர்வு செய்யப்படும். இதில் ரகசியம் கடைப்பிடிக்கப்படும். அப்படி இருக்கும் நிலையில் கைடுகளில் இருந்த கேள்விகள் எந்த பிசிறும் இல்லாமல் எப்படி இடம் பெற்றது என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் அப்போது டிஎன்பிஎஸ்சி இதை துளியும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Tags : DNBSC Agricultural Extension ,Writers ,Salem , TNPSC, Agriculture, Controversy, Competence
× RELATED புத்தகம் படித்து கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்