×

கர்நாடகாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்து மாயம்: போலீசார் தேடுதல் வேட்டை!

மங்களூர்: கர்நாடகாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்து மாயமாகியுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இத்தாலியில் நேற்று வரை 366 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று மட்டும் 1492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக அதகரித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் மங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்திறங்கிய நபர் ஒருவருக்கு தீவிர காய்ச்சல் உள்பட கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அவரை வென்லாக் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்துள்ளனர். தொடர்ந்து அவரை 24 மணிநேரம் கண்காணிப்பில் வைத்து வழக்கம் போல் நடத்தப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ உயரதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு தனக்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்று கூறி மருத்துவமனை பணியாளர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்வேன் என கூறிய அந்நபர் அதன்பின்பு காணாமல் போயுள்ளார். இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இன்று மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, அந்த பயணியின் வீட்டில் கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.



Tags : Coroner ,Karnataka , Karnataka, Mangalore, Wenlock Hospital, Corona virus
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!