×

தரமற்ற பணியால் சேதமாகும் தடுப்பணைகள்: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தரமற்ற பணியால் சேதமடையும் தடுப்பணைகளால் விவசாயிகள் வேதனையடைகின்றனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணை மூலம் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

இதில், ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், சமத்தூர், கோமங்கலம், வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம் உள்பட பல கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. இங்கு மழைகாலங்களில் தண்ணீர் வெகுவாக உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு பெய்த தென்மேற்கு மற்றும் பருவமழையால், பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக  மழையின்றி  வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் சேமிக்காக அமைக்கப்பட்ட  தடுப்பணைகள் பல வறண்ட நிலையில் உள்ளது.

இதற்கிடையே, பல கிராமங்களில் தடுப்பணையின் ஓரம் சேதமடைந்த நிலையில் உள்ளது.இதில், பொள்ளாச்சியை அடுத்த ஆர்.கோபாலபுரத்திலிருந்து தாவளத்துக்கு செல்லும் வழியில் உள்ள கோரையாறு தடுப்பணையானது சுமார் 10 மாதங்களுக்கு முன்பு ரூ.75 ஆயிரத்தில் புதுப்பிக்கப்பட்டது.
பின்னர், மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியது. ஆனால், தரமற்ற பணியால் அந்த தடுப்பணையின் பக்கவாட்டு கல்சுவர் சரிந்து சேதமடைந்துள்ளது.

இதனால், வருங்காலங்களில் கூடுதல் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்று சுற்று வட்டார கிராமங்களில் ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளில் சேதமானவற்றை கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Non-standard work, vaccinations, farmers, agony
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...