×

சத்து பற்றாக்குறை, மனம் பலவீனமடைதல் காரணமாக 18 வயதில் பிரசவிக்கும் பெண்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது: கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு

வேலூர்: சத்து பற்றாக்குறை, மனம் பலவீனமடைதல் போன்ற காரணங்களால் 18 வயதில் பிரசவிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார். வேலூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சைல்டு லைன் இணைந்து நடத்திய குழந்தை திருமண தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழந்தைகள் நல குழுமத் தலைவர் சிவகலைவாணன் தலைமை தாங்கினார். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளார் தேவேந்திரன், தொழிற்கூட அலுவலர் ஓம்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்து பேசியதாவது:குழந்தை திருமண தடைச்சட்டம் 2006ம் ஆண்டு இயற்றப்பட்டது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கப்படுகிறது. குழந்தை திருமணங்கள் நடத்துவோர் மீதும், அதனை ஏற்பாடு செய்பவர்கள் மீதும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. மீறி திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
18 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரசவிக்கும்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. தாயை இழந்த குழந்தை அனாதையாகும் சூழல் ஏற்படுகிறது. திருமண மண்டப உரிமையாளார்கள் தங்கள் மண்டபங்களில் திருமண ஏற்பாடு செய்ய வருபவர்களிடம் பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது முடிவடைந்துள்ளதா? என சான்றுகளை ஆய்வு செய்துவிட்டு அதன்பின்னர் மண்டபத்தை வாடகைக்கு விடவேண்டும்.

பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அதேபோல் கோயில்களில் திருமணம் செய்ய வருவோரிடம் சான்றிதழ்கள் பெறவேண்டும். அனைத்து திருமண மண்டப வாயில்களிலும் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதன்மூலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும். வேலூர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடைவது அதிகமாக உள்ளது.

குழந்தை திருமணத்தினால் குழந்தையின் கல்வி தடைபடுதல், அடிக்கடி கருவுருதல், கருக்கலைவு ஏற்படுதல், குழந்தையின் கருக்கலைப்பால் சத்துப்பற்றாக்குறை, மரணம் ஏற்படுதல், உடல், மனம் பலவீனமடைதல், குடும்பத்தை வழி நடத்த முடியாமல் குழந்தைகள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படுதல், குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு ஆளாகிவிடுதல் போன்ற தீமைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. எனவே குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Shanmugasundaram ,Women ,delivery women , 18 years age, delivery women, death rate, collector Shanmugasundaram
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...