×

கடலூர் எஸ்பியிடம் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மனு

கடலூர்: காதல் திருமணம் செய்துகொண்ட சித்த மருத்துவர், தனது கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கடலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். ஸ்ரீமுஷ்ணம் வட்டம் க.தொழூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா(24) என்பவர், தனது காதல் கணவருடன் வந்து கடலூர் எஸ்பி ஸ்ரீ அபிநவ்விடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் தற்போது மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் நங்கவள்ளி கிராமம். தந்தை மாணிக்கவேல், தாய் காயத்திரி. சித்த மருத்துவம் இளங்கலை முடித்துள்ளேன். மேலும் எனது சொந்தக் கிராமமான  நங்கவள்ளியில் கிளினிக் வைத்துள்ளேன். நான் படித்த சித்த மருத்துவக் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆக படித்து வந்தவர் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் க.தொழூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். இரண்டு ஆண்டுகளாக மோகன்ராஜை காதலித்து வந்தேன். இது குறித்து வீட்டில் தெரிவித்தேன். ஆனால் வீட்டில் மோகன்ராஜிக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லை. மேலும் வேறு இடத்தில் எனக்கு திருமணம் செய்யும் பணியில் எனது பெற்றோர் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினேன். மேலும் மோகன்ராஜிடம் என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்து அவரது உறவினர்கள் முன்னிலையில் கடந்த 6ம் தேதி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே எனது வீட்டார் தகவல் தெரிந்து எனக்கும், எனது கணவருக்கும், மேலும் அவரது வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, எனது கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மனு கொடுக்கிறேன். உரிய பாதுகாப்பு வழங்க  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி ஸ்ரீஅபிநவ்   உத்தரவிட்டார்.

Tags : Cuddalore SP , Romantic couple,petition , protection , Cuddalore SP
× RELATED வள்ளலார் குறித்து சர்ச்சை கவர்னர்...