×

பறவை காய்ச்சல், கொரோனா வைரஸ் பீதியால் முட்டை விலை வரலாறு காணாத வீழ்ச்சி: நாமக்கல்லில் கூவி, கூவி விற்பனை

நாமக்கல்:பறவை காய்ச்சல், கொரோனா வைரஸ் பீதியால், கோழிப்பண்ணைகளில் முட்டை விலை வரலாறு காணாத வகையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களில் வைத்து கூவி, கூவி விற்பனை செய்கின்றனர்.  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள 2 கோழிப்பண்ணைகளில் 12 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் நிறைந்த மாவட்டமான நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பண்ணையாளர்கள் இறங்கியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் கோழிகளை தாக்கியுள்ளதாக வாட்ஸ் அப் குரூப்களில் தொடர்ந்து தகவல் பரவி வருவதால்,முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை குறைந்துவிட்டது.

நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் தற்போது ஒரு முட்டை 250 காசுக்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கிறார்கள். ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 380 காசு வரை இருப்பதால், பண்ணையாளர்களுக்கு தினமும் ₹6 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்,தமிழக முட்டைகளை அங்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு,அம்மாநில அரசுத்துறை அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளனர். கால்நடை பராமரிப்புத்துறையின் சான்றிதழ் பெற்ற முட்டை வாகனங்கள் மட்டுமே, கேரளாவுக்குள் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவில் பறவை காய்ச்சல் மற்றும் சமூக வளைதளங்களில் கொரோனா வதந்தியால் முட்டையின் விலை, பண்ணைகளில் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யும் என்இசிசி ஒருமுட்டையின் பண்ணைவிலை 308 என அறிவித்த போதும், பண்ணைகளில் 230 காசுக்கு தான் வியாபரிகள் கடந்த ஒரு வாரமாக முட்டைகளை வாங்கிச் செல்கிறார்கள். தற்போது கோடைக்காலம் என்பதால், முட்டை விற்பனை வழக்கத்தை விட குறைவாக தான் இருக்கும். எனவே பண்ணையாளர்களும் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து பண்ணையளார்கள் கூறுகையில்,‘இதற்கு முன் எப்போதும் இவ்வளவு குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்தது இல்லை.வட மாநிலங்களில் முட்டை விற்பனை குறைந்துவிட்டதால் அதன் தாக்கம் தமிழகம்,கேரளா வரை பரவி விட்டது,’என்றனர். இதற்கிடையில் நாமக்கல்லை சேர்ந்த பெரிய பண்ணையாளர்கள்,நஷ்டத்தை சரிகட்டும் வகையில், வாகனங்களில் முட்டைகளை கொண்டு வந்து,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பண்ணை விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.30 முட்டை கொண்ட ஒரு அட்டை ₹90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு முட்டை 370 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் இந்த முட்டைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள்.

தற்போது முட்டை விற்பனை குறைந்துள்ளதால்,வியாபாரிகளும் முட்டை அதிகம் வாங்குவதை குறைத்துக் கொண்டனர். இதனால் வேறு வழியில்லாமல் பண்ணையாளர்கள் நேரடியாக சாலையில் கடை போட்டு முட்டை விற்பனையில் இறங்கியுள்ளனர்.மேலும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில்,குறைந்த விலையில் விற்க நிரந்தரமான முட்டை விற்பனை கடைகளை திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Tags : kovi , Bird Flu, Corona Virus,Panic
× RELATED நாச்சியார்கோவில் ரேஷன் கடையில் திருவிடைமருதூர் எம்எல்ஏ திடீர் ஆய்வு