×

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கீடு; சீட் கேட்ட தேமுதிகவுக்கு ஏமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். அந்த அறிக்கையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள்


*அதிமுக கழக கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தம்பிதுரை மக்களவை முன்னாள் துணை சபாநாயகராக பதவி வகித்தவர் ஆவார். இவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றார்.

*அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

*அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள வாசனுக்கு சீட் தரப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படவில்லை.

தேமுதிகவுக்கு சீட் இல்லை

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தேமுதிக கேட்ட ஒரு இடமும் தரப்படவில்லை.மைத்துனர் சுதீஷை மாநிலங்களவைக்கு அனுப்ப விஜயகாந்த் போட்டு இருந்த திட்டம் வீணானது.

ஜி.கே. வாசனை அதிமுக அறிவித்ததால் அனைவரும் பெரும் அதிர்ச்சி

மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜி.கே. வாசனை அதிமுக அறிவித்ததால் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜக சிபாரிசு பெயரில் ஜி.கே.வாசனுக்கு அதிமுக இடம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநிலங்களவை உறுப்பினராக ஏற்கனவே 2 முறை பதவி வகித்தனர் ஜி.கே.வாசன்.மக்கள் நேரடியாக சந்திக்கும் எந்த தேர்தலிலும் ஜி.கே.வாசன் இதுவரை போட்டியிட்டது இல்லை.

ஜி.கே.வாசன் பேட்டி


இதையடுத்து அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு சீட் வழங்கியதற்கு கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து ஜி.கே. மேலும் பேசுகையில்,அதிமுகவின் வெற்றிக்காக த.மா.கா. உழைத்துக்  கொண்டிருப்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான திட்டங்கள், நிதியைப் பெற பாலமாக செயல்படுவேன்.சிஏஏவினால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதுதான் நிலைப்பாடு, எனத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் குறித்த முழு விவரம்

*தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

*அதன்படி, தேர்தல் அறிவிக்கை மார்ச் 6ம் தேதி (வெள்ளி) வெளியிடப்படும். அன்றைய தினத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி. மார்ச் 16ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.

*வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 18.3.2020. வாக்குப்பதிவு நாள் 26.3.2020. வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

*இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை (பாலசுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

*வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

*தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

*இதையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.



Tags : elections ,Rajya Sabha ,GK Vasan Temuthika ,AIADMK , AIADMK, Candidates, Dimuthika, Rajya Sabha, Thottal, Paneer wealth
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...