×

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் அரசு பாரபட்சம்? வட இந்திய மாணவர்களுக்கே முன்னுரிமை என மீனவர்கள் புகார்

ஈரான்: கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரான் அருகே உள்ள தீவில் சிக்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் வாட்ஸ்அப் வாயிலாக தங்களது நிலையை விளக்கி வீடியோ அனுப்பியுள்ளனர். அதில், 900 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவிப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஈரானில் தங்கி படிக்கும் வட இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் மூலம் அறிந்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள் தங்கியுள்ள தீவிலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மன உளைச்சலில் சிக்கியுள்ள தங்களை தாயகம் அழைத்துச்செல்ல மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதுவரை 104 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Government ,Indians ,Iran ,Fishermen ,North Indian , Iranians, Indians, Central Government, North Indian students, Tamil Nadu fishermen
× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...