×

கொரோனா வைரஸ் பீதியால் தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு மார்ச் 31ம் தேதி வரை ரத்து : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31ம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் மட்டுமல்லாது துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகைப்பதிவு பதிவேடு புத்தகத்தில் தற்காலிகமாக பதிவு செய்ய பள்ளிக்கலவித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய அறிவுறுத்தலை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.முன்னதாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏன் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ரத்து ?

பயோமெட்ரிக் உபகரணத்தில்,  ஒருவர் தனது விரல் மூலம் பதிவு செய்யும்போது, அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று, மற்றொருவர் தனது கை விரலை வைக்கும் சமயம் பரவும் வாய்ப்பு உள்ளதால் பயோமெட்ரிக் வருகை பதிவேடுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் அனைவரும் தங்களது வருகை பதிவேட்டில் கையெழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக அளவில் கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோடு கூடாது என்றும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதவற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, காஷ்மீரிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ரத்து

நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தலைநகர் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதே போல மத்தியஅரசும், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு இந்த மாதம் 31ந்தேதி வரை தற்காலிகத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக முதன்மை செயலாளர் ரோகித்கன்சால் அறிவித்துள்ளார்.

 இந்தியாவில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் வுகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ், பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதுவரை 104 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி

இதற்கிடையில் 28ம் தேதி ஓமன் நாட்டில் இருந்து 45 வயதுள்ள காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கத்தார் வழியாக சென்னை வந்த இந்திய சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவன் மற்றும் அவரது தந்தையை பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நேற்று மதியம் நேபாளத்தில் இருந்து வந்த ரயில்வே ஊழியர் ஓம் பகதூர்( 59) என்பவர் கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் எடுத்து கிண்டியில் உள்ள ரத்தப் பரிசோதனை மையத்துக்கு  அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Coroner ,visit ,teachers ,schools ,Tamil Nadu ,Viru Panic , Corona, SchoolWidth, Department, Directive, Impact, Virus, Schools, BioMetric, Teachers,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்