×

கொரோனா வைரஸ் பீதி: இந்தியா உள்பட 14 நாடுகளுடனான விமானத் தொடர்பினை துண்டித்தது கத்தார் அரசு!

தோஹா: கொரோனா வைரஸ் பீதியால், இந்தியா உள்பட 14 விமானத் தொடர்பினை கத்தார் அரசு துண்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் மரணித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல் ஈரானிலும் 194 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாத்துகொள்ள முன்னெச்சரிக்கையாக இந்தியா உள்பட 14 நாட்டு பயணிகள் விமானச் சேவைகளுக்கு கத்தார் அரசு தடை விதித்துள்ளது. அதாவது, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து நாடுகளுடனான விமானத் தொடர்பினை கத்தர் அரசு துண்டித்துள்ளது. இதன்மூலம், இன்று அதிகாலை முதல், மேற்கண்ட நாடுகளில் இருந்து கத்தாருக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விதியானது கத்தர் வாழ் குடிமக்கள் (Resident permit holders), ஆன் அரைவல் விசாவில் வருவோர், டூரிஸ்ட் விசாவில் வருவோர் அனைவரைக்கும் பொருந்தும். இச்செய்தி, இந்தியாவில் விடுமுறை முடிந்து கத்தார் திரும்புவோர், அலுவல் மற்றும் புதிய வேலை வாய்ப்பு காரணமாக கத்தாருக்கு பயணிப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Coroner Virus Panic ,countries ,Qatar ,India ,Nations On Qatar's Travel Ban List , Corona Virus, India, 14 Countries,Travel Ban, Qatar Government
× RELATED பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை : ஆய்வில் தகவல்