ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை!

சோபியான்: ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கவ்ஜபோரா ரெபன் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான பகுதியை அடைந்தபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 2 அல்லது 3 தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கும் பாதுகாப்பு படையினர், அவர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள தீவிரவாதியின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: