×

புதிய சட்டம் வந்தால் குடிநீர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி: ஹரிஹரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர்

சென்னை: சென்னை மாநகரை ஓட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள 301 கிராமங்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த 3 மாவட்டப்பகுதிகளில் எல்லா  கிராமத்திலும் தண்ணீர் எடுக்க முடியாது. நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எடுக்க அனுமதி கிடையாது. சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குடிநீர் வாரிய  அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  எல்லா இடங்களிலும் நிலத்தடி நீர் எடுக்க முடியாது; இதனால் குறைவான கிராமங்களில் தான் தண்ணீர் எடுக்க அனுமதிக்கிறோம். பல கட்ட  சோதனைகளுக்கு பின்னர் தான் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படும்.

  அதுவும் நாங்கள், குறிப்பிட்ட கிராமத்தில் நிலத்தடி நீர் எடுக்க முடியுமா, சாத்தியம் உண்டா என்று திடமாக கண்டறிவோம். அந்த பகுதியில் தண்ணீர் எடுக்க முடியுமா என்று உறுதி செய்வோம். அதன்பிறகே, அங்கே நிலத்தடி நீர் எடுக்க  அனுமதி தரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீர் எடுத்து மற்ற இடங்களில் கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதில், கேன் வாட்டர் குடிநீர் உற்பத்தி ஆலை மட்டுமின்றி கிணறுகள்அமைத்து நேரடியாக தண்ணீர் எடுத்து கொண்டு செல்ல சென்னை குடிநீர் வாரியத்திடம் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். ஆனால், இந்த கேன் வாட்டர் குடிநீர் தரமாக  இருக்கிறதா என்று சோதனை செய்வது இல்லை. அது எங்கள் வேலை இல்லை; அந்த பணியை செய்ய வேண்டியது உணவு பாதுகாப்புத்துறை. இந்த துறை தான்  குடிநீர் சுத்தமாக, சுகாதாரமாக வழங்கப்படுகிறதா என்று ஆராய்ந்து உறுதி  செய்யும்.

நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளும் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் குடிநீரை வினியோகம் செய்வது குறித்து உரிய கண்காணிப்பை உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் கேன் வாட்டர் குடிநீர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படுகிறதா என்பதை சோதனை செய்து உரிமம் வழங்கி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுப்பணித்துறை தான் மாநிலம் முழுவதும் கேன் வாட்டர் குடிநீர்  உற்பத்தி ஆலை நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்று வழங்குகிறது.நிலத்தடிநீர் எடுப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த சட்டத்தை வடிவமைக்க பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த குழுவினர்  இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பல முறை கூடி இந்த சட்டத்தை வகுத்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சட்டம் வந்தால் பல பிரச்னைகள் தீரும்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. இதை தொடர்ந்து அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 2020 சட்டசபையில்  வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் குடிநீருக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கும், தொழிற்சாலைகள் நிலத்தடி நீர் எடுப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்; நிலத்தடி நீர் எடுக்க  என்ன மாதிரியான விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்பது  தொடர்பாக அதில் குறிப்பிடப்பட உள்ளது. மேலும், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுத்தால் தண்டனை, அபராதம் குறித்து இந்த சட்டத்தில் சொல்லப்படுகிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இது போன்ற பிரச்சனைக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த சட்டம் வரும் சட்டசபை கூட்ட தொடரில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட கிராமத்தில் நிலத்தடி நீர் எடுக்க முடியுமா, சாத்தியம் உண்டா என்று திடமாக கண்டறிவோம். அந்த பகுதியில்  தண்ணீர் எடுக்க முடியுமா என்று உறுதி செய்வோம். அதன்பிறகே, அங்கே நிலத்தடி  நீர் எடுக்க அனுமதி தரப்படுகிறது.

Tags : Hariharan ,Managing Director ,Drinking Water Board ,Chennai , Drinking water theft ends: Hariharan, Chennai Drinking Water Board Managing Director
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...