×

தஞ்சை, புதுகையில் ஜல்லிக்கட்டு: 2100 காளைகள் சீறிப்பாய்ந்தன: மாடுகள் முட்டி 68 பேர் காயம்

திருச்சி: தஞ்சை, புதுகையில் நடந்த ஜல்லிக்கட்டில் 2100 காளைகள் சீறி பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்தனர்.தஞ்சை அருகே மானோஜிப்பட்டியில் மாசிமக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடை பெற்றது. போட்டியில் 731 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகள் முட்டியதில் 24 வீரர்கள், 8 பார்வையாளர்கள் என  மொத்தம் 32 பேர் படுகாயமடைந்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆவூர் புனித பெரிய நாயகி மாதா கோயில்  விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, கோயில் அருகே உள்ள குளத்திடலில் நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர்  கொடியசைத்து  துவக்கி வைத்தார். 265 மாடுபிடி  வீரர்கள் பல பிரிவுகளாக காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 802 காளைகள் கால்நடை மருத்துவர்களின்  பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில்  21 பேர் காயம் அடைந்தனர். ஆவூர் அருகே உள்ள  செங்களாக்குடி பகுதியை சேர்ந்த ஜல்லிகட்டு மாடு மின்சார கம்பி அறுந்து  கிடந்ததில் சிக்கி பலியானது. கறம்பக்குடியில் 15 பேர் காயம்: கறம்பக்குடி தாலுகா மழையூரில் முத்து மாரியம்மன், காப்பு முனிகோயில் 22ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 622 காளைகள்  பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 162 பேர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் மாடு முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 15 பேர் காயமடைந்தனர்.

மாடு முட்டி சிறுவன் பலி: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல், கன்னிகாபுரம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் போத்தி மகன் விஜய்காந்த் (12). நேற்று முன்தினம் காலை, கல்வாசல் கிராமத்தில் நடந்த  காளை விடும் விழாவை பார்க்க சென்றான். காளைகளின் கொம்புகளில் பரிசு பொருட்களை கட்டி, வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர். சீறிப்பாய்ந்து ஓடிவந்த காளை ஒன்று திடீரென கூட்டத்தில் பாய்ந்தது. இதில் வேடிக்கை பார்த்து  கொண்டிருந்த, சிறுவன் விஜய்காந்தை, அந்த காளை முட்டித்தள்ளியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன்  விஜய்காந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மஞ்சுவிரட்டில் 55 பேர் காயம்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல்  மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக வயல்வெளிகளிலும் சாலை ஓரங்களிலும் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளை பிடிக்க முயன்ற 55 பேருக்கு காயம் ஏற்பட்டது  பெண்கள், குழந்தைகள் என 50  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அருகேயிருந்த மலைப்பாறை மீது அமர்ந்து  மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

Tags : bulls , Jalalikattu: 2100 Bullocked By Cows
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்