×

முறைகேடாக கடன் வழங்கி வங்கியை திவாலாக்கிய யெஸ் வங்கி நிறுவனர் கைது: ரூ.3,700 கோடிக்கு ரூ.600 கோடி லஞ்சம்...ரூ.2,000 கோடி முதலீடு; லண்டனில் சொத்து குவிப்பு

மும்பை: தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு முறைகேடாக பல ஆயிரம் கோடி கடன் வழங்கி, ‘யெஸ் வங்கி’யை திவாலாக்கிய அதன் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது. தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி, பல நிறுவனங்களுக்கு இஷ்டத்துக்கு கடனை வாரி வழங்கியது. இதனால், வராக்கடன் அதிகரித்து, மூலதன பற்றாக்குறை நிலைக்கு சென்றது. தற்போது, இந்த வங்கி ரிசர்வ் வங்கியின்  கட்டுப்பாட்டில் உள்ளது. யெஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராணா கபூர், நிதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவருடைய முறைகேடுகளால்தான் யெஸ் வங்கி திவாலானது தெரிய வந்தது. இதையடுத்து, மும்பையில்  உள்ள அவரது சொகுசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளி இரவு சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் 20 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத்  துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு நிதி மோசடிகளில்  ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தேவான் ஹவுசிங் நிதி நிறுவனத்துக்கு (டிஎச்எப்எல்) யெஸ் வங்கி ₹3,700 கோடி கடன் கொடுத்துள்ளது. ஆனால், இந்த கடனை டிஎச்எப்எல்  திருப்பிச் செலுத்தவில்லை. இருப்பினும், அந்த நிறுவனம் மீது யெஸ் வங்கி எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் இருந்துள்ளது. காரணம், ராணா கபூரின் மனைவி மற்றும் 3 மகள்கள் பல போலி நிறுவனங்களை நடத்தியுள்ளனர். அதில் ஒன்று டிஓஐடி நிறுவனம். டிஎச்எப்எல்.லிடம் இருந்து ₹600 கோடியை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, ₹3,700  கோடி கடனை வசூலிக்காமல் வராக்கடனில் சேர்க்க ராணா கபூர் குடும்பம் முயன்றுள்ளது. இந்த ₹600 கோடி லஞ்சப் பணம், டிஓஐடி. நிறுவனத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களில் ராணா கபூர் குடும்பத்தினர் ₹2  ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்களும்சிக்கியுள்ளன. மேலும், லண்டனில் ஏராளமான சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர். இந்த சொத்துக்கள் எந்தப் பணத்தில் வாங்கப்பட்டது என அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

 விசாரணையின்போது, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ராணா கபூர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், அவரை நேற்று அதிகாலை 3 மணிக்கு நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்  அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவர் விடுமுறை கால நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் ராணா கபூர் கூறுகையில், ‘‘எனது மகள்கள் ராதா கபூர், ரோஷ்னி கபூர் ஆகியோரின் பெயரில் டிஓஐடி நிறுவனம் உள்ளது. யெஸ் வங்கி, டிஎச்எப்எல் நிறுவனத்துக்கு ₹3,700 கோடி கடன் கொடுத்தது. பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து டிஓஐடி நிறுவனம் ₹600 கோடி கடன் வாங்கியது. அது வராக்கடன் அல்ல. அதை நாங்கள் திருப்பிச் செலுத்தி வருகிறோம்’’ என்றார். இந்த நிதி மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த விரும்புவதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறியது. இதையடுத்து, ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், ராணா கபூர், டிஎச்எப்எல் மற்றும் டிஓஐடி நிறுவனம் மீது சிபிஐயும் குற்றச்சதி, மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்துள்ளது.

வெளிநாடு தப்ப முயன்ற மகள்

ராணா கபூரின் மகள் ரோஷ்னி கபூர். தனது தந்தை கைது செய்யப்பட்டதும் நேற்று இவர், மும்பையில் இருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக லண்டன் செல்ல முயன்றார். ஆனால், அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து  நிறுத்தினர். ராணா கபூரின் நிதி மோசடியில் ரோஷ்னி கபூரின் நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால், அவர் தப்பிச் செல்லாமல் தடுக்கப்பட்டார்.

ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கினார்

அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, ராணா கபூர் வீட்டில் 44 விலை உயர்ந்த ஓவியங்கள் இருந்தன. இவற்றில் சில அரசியல்வாதிகளிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  வரைந்த ஓவியம். இதனால் ராணா கபூருக்கும், சோனியா காந்தி குடும்பத்துக்கும்  நெருங்கிய தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

Tags : Yes Bank ,Founder ,bank ,London , Founder of Yes Bank who bankrupted bank by lending money Rs.600 crores bribe to Rs.3,700 crores… .000 crores of investment
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை