×

பேராசிரியர் வழங்கிய ஆலோசனைகளின்படி லட்சியப் பாதையில் நம் பயணம் தொடரும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நம்மை நாமே தேற்றிக்கொண்டும்,  இனமானப் பேராசிரியர் வாழ் நாளெல்லாம் எண்ணிய  வழியில், லட்சியச் சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள  முக்கியக்  கடமையாகும் என்று தொண்டர்களுக்கு  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர்  98 வயதில் தன் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்;  நிறைவாழ்வு கண்டவர். தந்தை பெரியாரிடம் அன்புடன் பழகி, லட்சியங்களைப் பயின்றவர். பேரறிஞர் அண்ணாவிடம் தம்பியாக நெருங்கி இயக்கம் வளர்த்தவர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் தோழராக - மூத்த சகோதரராக,  தோள்  கொடுத்து சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் கழகத்தை மீட்பதில் உற்றதுணையாக நின்றவர். தன் பெயரில் உள்ள அன்பை என்னிடம் கொடையாக வார்த்த இனமானப் பேராசிரியர் அன்பழகனார் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான். அது,  கழகம் எனும் லட்சியக் கோட்டையைக் கட்டிக் காத்திடும் கடின உழைப்பு-வலிமை மிகு உழைப்பு.

 1966ம் ஆண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் நிலையத்தில் அன்றைய மாணவனான நானும், என் வயதையுடைய கழக நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியபோது, அந்த அமைப்பைத் தொடங்கி வைத்து  வாழ்த்தியவர் பேராசிரியர் தான்.  1980ல் கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டபிறகு, அதன் செயலாளராக நான் நியமிக்கப்பட்டபோதும் வாழ்த்தியவர் பேராசிரியர். கழகத்திற்குரிய “அன்பகம்” கட்டடத்தைப் பெறுவதில்  இளைஞரணி, சென்னை மாவட்டக் கழகம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஒன்றை வைத்தவரும் பேராசிரியர் தான். எந்த அமைப்பு, 10 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தருகிறதோ  அந்த அமைப்புக்கே அன்பகம் எனப் பேராசிரியர் வைத்த போட்டியினை ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கழகக் கொடிகளை ஏற்றியும், படிப்பகங்களைத் திறந்து வைத்தும், பலவித விழாக்களை நடத்தியும்,  நிதி  திரட்டி, 11 லட்ச ரூபாயாகப் பேராசிரியரிடம் வழங்கி, இளைஞரணிக்கு அன்பகம் உரிமையானது.

தலைவர் கலைஞர் திமுகவின் பொருளாளராக இருந்த போது, 1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணா 10 லட்ச ரூபாய் தேர்தல் நிதி திரட்டப் பணித்து, தலைவர் 11 லட்ச ரூபாயாக வழங்கியதை, ‘அன்பகம்’ நிகழ்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டி,  “கழகத்தை வழிநடத்தும் தலைமைக்குரிய ஆற்றல் தம்பி ஸ்டாலினிடம் இருக்கிறது” என்று மனமார வாழ்த்தினார். அவற்றை வெறும் வார்த்தைகளாக நான் கருதவில்லை. பேராசிரியர் வைத்த தேர்வில் தேறிய மாணவன் பெற்ற சான்றிதழாகக்  கருதினேன். அப்பாவையும் பெரியப்பாவையும் இரண்டாண்டு இடைவெளிக்குள்ளாக அடுத்தடுத்து இழந்த நிலையில், இயற்கை  பறித்துக்கொண்ட சதியால், திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வகையிலும் கலங்கி நிற்கிறேன்.

 உங்களில்  ஒருவனான நான் மட்டுமல்ல, ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்ட திமுக உடன்பிறப்புகள் அனைவருமே உயிரும் உடலும் கலங்கித்தான் நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது? என்று தெரியாத நிலையில், நமக்கு நாமே ஆறுதலாகவும்,  நம்மை நாமே தேற்றிக்கொண்டும்,  இனமானப் பேராசிரியர் வாழ் நாளெல்லாம் எண்ணிய வழியில், லட்சியச்  சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள  முக்கியக் கடமையாகும்.  அரசியல்  மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியப் பெருந்தகைக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட  அதிமுகவினர், திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள்-நிர்வாகிகள், ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரிகள், மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமிழறிஞர்கள், பொதுநல ஈடுபாடு கொண்டோர், கலையுலகத்தினர்,  வணிகத்துறையினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் திமுக என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில்,  கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

 திராவிடச் சிகரமாக, இனமான இமயமாக உயர்ந்து நிற்கும் உங்கள் புகழினைக் கட்டிக்காத்திடும் வகையில், நீங்கள் வழங்கிய ஆலோசனைகளோடும், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளோடும் லட்சியப் பாதையில், எங்கள் பயணம்  தொடரும். தமிழ் இனம்-மொழி-பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும் பயணத்தை நீங்கள் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில்  தொடர்ந்திடுவோம். பெறப் போகும் வெற்றி மலர்களை, முத்தமிழறிஞர் தலைவர்  கலைஞருக்கும், இனமானப் பேராசிரியரான தங்களுக்கும்  காணிக்கையாக்கிடுவோம். இது உறுதி. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்: மகளிர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கருத்து

பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை. மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம் என்று மகளிர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல்  பதிவில் கூறியிருப்பதாவது:  மார்ச்-8(நேற்று) உலக உழைக்கும் மகளிர் தினம்!. சமூகத்தின், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!. பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை; மதிப்பதில், நடத்துவதில்  காட்டுவோம். உரிமை என்பது கொடுப்பது அல்ல; அவர்களாகவே எடுத்துக் கொள்வதில் இருக்கிறது. “இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம் உலகுக்கு! பெண்ணே வாழ்க! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,volunteers , Our journey on the ambitious path, as suggested by the professor: MK Stalin's letter to volunteers
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...