×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: நாளை மறுநாள் மானியக்கோரிக்கை விவாதம் தொடக்கம்...பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம்  தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17ம் தேதி முதல் 20ம்  தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை நடைபெறாமல் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் 9ம் தேதி சட்டப்பேரவை கூடும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் எந்த மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, நிறைவேற்றுவது என்பது  குறித்து விவாதிக்க கடந்த 2ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில், இன்று முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும்  மறைந்த திமுக பொதுச்செயலாளரும், 9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான க.அன்பழகன், மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு, இன்றைய கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

நாளை பேரவை கூட்டம் கிடையாது. தொடர்ந்து 11ம் தேதி வனத்துறை, 12ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை என்று பல்வேறு துறைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். இன்று  தொடங்கும் கூட்டம் மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்னையை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், 23 நாட்கள் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளார். சட்டப்பேரவை கூடுவதையொட்டி தலைமை செயலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Opposition , Tamil Nadu Legislative Assembly meets today in hot political scenario: Opposition plan to raise issues
× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...