×

இரவு நேரத்தில் குடிமகன்கள் உலா மதில்சுவர் இல்லாமல் இயங்கும் குன்றத்தூர் தாலுகா அலுவலகம்: உடமைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

சென்னை: குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய தடுப்பு வேலிகள் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுவதால், அங்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தரும் பொதுமக்களின் உடமைகள் திருடு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. அதன் விளைவாககுன்றத்தூர், மாங்காடு, திருமுடிவாக்கம், சோமங்களம், படப்பை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குன்றத்தூரில் தனி தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது.குன்றத்தூர் சேக்கிழார் ஆண்கள் அரசு பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில், குன்றத்தூர் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாதி சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், விதவை உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதற்காக குன்றத்தூர் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் போதிய தடுப்பு வேலிகள் இல்லாமல் வட்டாட்சியர் அலுவலகம் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இருசக்கர வாகனம் மற்றும் ஆவணங்கள் எளிதில் திருடுபோகும் சூழல் உள்ளது.

குன்றத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் தடுப்பு வேலிகள் இல்லாததால் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானால் எளிதில் தாலுகா அலுவலகம் உள்ளே வந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.மேலும், தாலுகா அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தாலுகா அலுவலகம் எந்நேரமும் பாதுகாப்பு வேலி இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். மேலும் அப்பகுதி நாய்கள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளே நுழைவது வழக்கமாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே பொதுமக்களின் நலன் கருதி திறந்த நிலையில் காணப்படும் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போதிய தடுப்பு வேலிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kundathoor Taluk Office of Citizens Running ,Night Kundathoor Taluk Office of Citizens , Kundathoor,Taluk Office , Citizens
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100