×

அயனாவரம் பொன்னுசாமி தெருவில் மரண குழியாக மாறிய பாதாள சாக்கடை: பொதுமக்கள் அச்சம்

பெரம்பூர்: அயனாவரம் பொன்னுசாமி தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மேன்ஹோல்கள் உடைந்து, திறந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தவறி விழும் அபாயம் உள்ளது.   சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் சீரமைக்க வசதியாக, குறிப்பிட்ட தூர இடைவெளியில் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடைப்பு  ஏற்படும் நேரங்களில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, இந்த மேன்ஹோல்களை திறந்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். பல இடங்களில் இந்த மேன்ஹோல் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது, உடைந்து பள்ளம் ஏற்படுகிறது.இவற்றை உடனடியாக சீரமைக்காத அதிகாரிகள், மேன்ஹோல் பள்ளத்தில் மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்து விடுகின்றனர்.இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகராட்சி 8வது மண்டலம்,  96வது வார்டுக்கு உட்பட்ட அயனாவரம் பொன்னுசாமி தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மேன்ஹோல்கள் பல மாதங்களுக்கு முன் உடைந்தது. இதனை இதுவரை சீரமைக்காததால், திறந்த நிலையில் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தவறி கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் ஒருவன், இந்த பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டான். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவனை தூக்கி முதலுதவி செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரகள் இவற்றை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Ayanavaram Ponnusamy Street ,street ,Ayatavaram Ponnusamy , Ayatavaram Ponnusamy ,street ,turned, death pit
× RELATED கீழடி அருகே அகழாய்வு பணிகள் இன்று துவக்கம்