×

டைமண்ட் பிரின்சசை தொடர்ந்து அமெரிக்கா வந்த கப்பலில் 21 பேருக்கு கொரோனா

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்கா வந்த கிராண்ட் பிரின்சஸ் கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிற்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கப்பல் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே கப்பலில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை சோதனை செய்ததில் சுமார் 700 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பிரத்யேக சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே கப்பலில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜப்பானை தொடர்ந்து  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வந்த கிராண்ட் பிரின்சஸ் கப்பலிலும்  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கப்பல் ஓக்லாண்டில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 3,533 பேர் இருப்பதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார். கப்பலில் இருந்த பயணிகளில் முதல் கட்டமாக 45 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 கப்பல் ஊழியர்கள் மற்றும் 2 அமெரிக்க பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கப்பலில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.



Tags : US ,Corona ,Diamond Princess , Corona , 21 people aboard, US ship ,Diamond Princess
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...