×

தென் ஆப்ரிக்காவுடன் ஒருநாள் தொடர் இந்திய அணியில் ஹர்திக், தவான்

அகமதாபாத்: தென் ஆப்ரிக்க அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோத உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை 5-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. எனினும், அதைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என மண்ணைக் கவ்விய இந்தியா, டெஸ்ட் தொடரையும் 0-2 என்ற கணக்கில் இழந்து சரிவை சந்தித்தது. வீரர்கள் தேர்வில் சொதப்பியது மற்றும் கேப்டன் கோஹ்லி உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தடுமாறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள இந்திய அணி, அடுத்து தென் ஆப்ரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது.

சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடரில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கோஹ்லி தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.அகர்வால், தாகூர், துபே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி மார்ச் 12ம் தேதி தரம்சாலாவிலும், 2வது போட்டி லக்னோவில் 15ம் தேதியும் நடக்கிறது. 3வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் மார்ச் 18ம் தேதி நடைபெறும்.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஜ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில்.

Tags : Hardik ,Dhawan ,series ,South Africa Hardik ,South Africa , Hardik, Dhawan, ODI series ,South Africa
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...