×

பைனலில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் ஆஸ்திரேலியா மீண்டும் உலக சாம்பியன்: 5வது முறையாக கோப்பை வென்று அசத்தல்

மெல்போர்ன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பைனலில், 85 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலிஸ்ஸா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 115 ரன் சேர்த்தது.பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு மிரட்டிய அலிஸ்ஸா ஹீலி 75 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ராதா யாதவ் பந்துவீச்சில் வேதா வசம் பிடிபட்டார். கேப்டன் மெக் லான்னிங் 16 ரன், கார்ட்னர் 2 ரன் எடுத்து தீப்தி ஷர்மா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரச்சேல் ஹெய்ன்ஸ் 4 ரன் எடுத்து பூனம் யாதவ் சுழலில் கிளீன் போல்டானார்.ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. பெத் மூனி 78 ரன் (54 பந்து, 10 பவுண்டரி), நிகோலா கேரி 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 2, பூனம், ராதா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் துரத்தலை தொடங்கினர். ஷபாலி 2 ரன் மட்டுமே எடுத்து ஷுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஹீலி வசம் பிடிபட, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த டானியா பாட்டியா 5 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார் (ரிடயர்டு ஹர்ட்). ஜெமிமா ரோட்ரிகியூஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 4 ரன் எடுத்து ஜோனஸன் பந்துவீச்சில் கார்ட்னர் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த வேதா 19 ரன், தீப்தி ஷர்மா 33 ரன், ரிச்சா கோஷ் 18 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.இந்திய அணி 19.1 ஓவரில் 99 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ராஜேஷ்வரி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஷுட் 4, ஜோனஸன் 3, சோபி, கிம்மின்ஸ், கேரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.85 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா உலக கோப்பையை தக்கவைத்ததுடன் 5வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த அணியின் அலிஸ்ஸா ஹீலி ஆட்ட நாயகி விருதும், பெத் மூனி தொடர் நாயகி விருதும் பெற்றனர். முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி இருந்த இந்திய அணி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

* ஆஸி. தொடக்க வீராங்கனைகள் அலிஸ்ஸா ஹீலி, பெத் மூனி இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீராங்கனைகள் வீணடித்தது மிகப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அதே சமயம், ஆஸி. வீராங்கனைகள் துல்லியமாகப் பந்துவீசியதுடன் துடிப்பாகப் பீல்டிங் செய்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
* இறுதிப் போட்டியைக் காண எம்சிஜி ஸ்டேடியத்தில் நேற்று 86,174 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
* இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெத் மூனி தட்டிச் சென்றார். அவர் 6 இன்னிங்சில் 259 ரன் (அதிகம் 81*, சராசரி 64.75, அரை சதம் 3) குவித்து முதலிடம் பிடித்தார். அலிஸ்ஸா ஹீலி 6 இன்னிங்சில் 236 ரன் குவித்து (அதிகம் 83, சராசரி 39.33, அரை சத்ம் 3) 2வது இடம் பிடித்தார்.
* விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியாவின் மேகான் ஷுட் 6 போட்டியில் 13 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். இந்தியாவின் பூனம் யாதவ், ஆஸி. வீராங்கனை ஜோனஸன் தலா 10 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடத்தை பிடித்தனர்.

Tags : World Cup ,World - Sports - India ,final , World , Sports ,India regain World ,Cup final
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...