×

நள்ளிரவில் சேவை துவங்கியதாக யெஸ் வங்கி அறிவித்த பிறகும் ஏடிஎம்மில் பணம் வரவில்லை: வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு

புதுடெல்லி: ஏடிஎம் சேவை மீண்டும் துவங்கிவிட்டது. வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என யெஸ் வங்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அதன்பிறகும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு, துவக்கப்பட்ட யெஸ் வங்கி, வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது.  மூலதன நிதி திரட்டும் முயற்சிகளும் பலன் தரவில்லை. இைத தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. வாடிக்கையாளர்கள் ₹50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்து, கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது.  இந்த கட்டுப்பாடு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீடிக்கும். இதன்படி, ₹50,000 க்கு மேல் பணம் எடுக்க தடை விதித்துள்ளது. உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு பணம் தேவைப்பட்டால் அதிகபட்சம் ₹5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம். இதையறிந்ததும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் யெஸ் வங்கியில் குவிந்தனர். இருப்பினும் பணம் எடுக்க முடியவில்லை. பலர் இணைய வங்கி சேவை மூலம் பணத்தை வேற கணக்கிற்கு மாற்ற முயன்றும் இயலவில்லை. ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முயன்றனர். யெஸ் வங்கி நெட்வொர்க் முழுக்க முடங்கியதே இதற்கு காரணம்.  

 இந்நிலையில், கடந்த 6ம் தேதி, ஏடிஎம்கள் இயங்கத்தொடங்கியதாக இந்த வங்கி அறிவித்தது. ஆனாலும் பல ஏடிஎம்களில் பணம் இல்லை. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு யெஸ் வங்கி ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டது. இதில், ‘வாடிக்கையாளர்கள் தங்கள் யெஸ் வங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, யெஸ் வங்கி ஏடிஎம் அல்லது பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்திருந்தது. இருப்பினும், ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியவில்லை. பிற வங்கி ஏடிஎம்கள் சிலவற்றில் டெபிட் கார்டு போட்டால் வேலை செய்யவில்லை. அதோடு, இணைய வங்கி சேவையை கூட பயன்படுத்த இயவில்லை என வாடிக்கையாளர்கள் டிவிட்டரில் பதிவு செய்திருந்தனர். வங்கியில் பணம் இருந்தும் எடுக்க முடியாததால் வாடிக்கையாளர் கவலை அடைந்துள்ளனர்.

லோன் இஎம்ஐ என்னவாகும்?
ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத வாடிக்கையாளர்கள் பலர், சமூக வலைதளங்களில் இதுகுறித்து பகிர்ந்திருந்தனர். அதோடு, லோன் இஎம்ஐ குறித்த கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டு–்ள்ளது. இதுபற்றி பல வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். வீடு, வாகன கடன்களுக்கான இஎம்ஐ தவணை யெஸ் வங்கியில் உள்ளது. வேறு வங்கிக்கும் மாற்ற முடியவில்லை இதற்கு என்ன செய்வது என கேட்டிருந்தனர். இதுபோல், யெஸ் வங்கியில் தங்களுக்கு உள்ள கணக்கை மூட உள்ளதாக பலர் தெரிவித்திருந்தனர்.

அச்சம் வேண்டாம் ரிசர்வ் வங்கி உறுதி
யெஸ் வங்கியை தொடர்ந்து வேறு சில வங்கிகளும் திவால் ஆகலாம் என தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வேறு சில வங்கிகள் திவால் ஆகலாம் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சில ஆய்வுகளின் அடிப்படையி–்ல் இது வெளியிடப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வருகிறது. எனவே, டெபாசிட்தாரர்கள் யாரும் வங்கியில் உள்ள தங்கள் பணத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை’’ என தெரிவித்துள்ளது. இதுபோல், இந்திய வங்கிகள் போதுமான மூலதன இருப்பு வைத்துள்ளன. எனவே, எந்த பாதிப்பும் ஏற்படாது. கவலை வேண்டாம் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இணைய வங்கி சேவையும் முடங்கியது
யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற முடியவில்லை. பணத்தை அனுப்ப முயன்றால் ‘பணம் அனுப்பும் வசதி தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை பார்ப்பது மற்றும் இதர நிதி சாரா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்’ என வங்கி இணையதளத்தில் தகவல் வருகிறது என ஒரு சிலர் கூறியிருந்தனர்.


Tags : Customers ,Yes Bank , No payment, ATM after Yes Bank, announced, midnight service, Customers
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...