×

ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு இடையே ம.பி. அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு பதவி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் அரசியல் நாடகத்துக்கு இடையே, மாநில அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக காங்கிரஸ்  மூத்த தலைவர் கூறினார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக 14 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ கடத்தி விட்டதாக காங்கிரஸ் கடந்த வாரம் குற்றம் சாட்டியது.  காங்கிரசுக்கு ஆதரவளித்த 10 எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் மாயமாகினர். இவர்களில் 7 பேரை திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மட்டும் இன்னும் காணவில்லை. இவர்களில் ஹர்தீப் சிங் டாங் என்பவரின் ராஜினாமா கடிதம் மட்டும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இதை அவரிடம் உறுதி செய்ய முடியவில்லை. காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்த பா.ஜ, ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமானதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு நடந்த உட்கட்சி சண்டை,’ என கூறியது. இந்நிலையில், ம.பி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ம.பி அமைச்சரவையை விரிவுபடுத்த உள்ளோம். காங்கிரஸ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பா.ஜ.வின் பணப் பெட்டி ஆபரேஷன் தோல்வியடைந்து விட்டது,’’ என்றார். ம.பி. அமைச்சரவையில் முதல்வர் கமல்நாத்தையும் சேர்த்து மொத்தம் 29 பேர் உள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Tags : Cabinet , Amidst , attempt MP Cabine, expands soon, dissatisfied MLAs
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை