×

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்களை பேனர் வைத்து அவமானப்படுத்துவதா?: உபி. அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் நஷ்டஈடு கேட்டு, புகைப்படத்துடன்  பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இழப்பீடு கேட்டு போட்டோவுடன், லக்னோ நகரின் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்படி, தற்போது பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இழப்பீடு செலுத்த தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘உ.பி.யில் முதல்வரின் சொல்படி நடக்கும் அரசு அதிகாரிகள், தங்களை அரசியல் சாசனத்துக்கு மேலானவர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். நீங்கள் அரசியல் சாசனத்துக்கு மேலானவர்கள் அல்ல என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உங்களுக்கு உரிமை, கடமை, பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்,’ என கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட சதப் ஜாபர் என்பர் கூறுகையில், ‘‘தனது போட்டோ பேனரில் வெளியிடப்பட்டிருப்பது நெறியற்ற செயல். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்’’ என்றார்.

Tags : protest ,Priyanka Gandhi ,Anti-CAA , Banner insulting public ,anti-CAA protest , UP. Priyanka Gandhi, condemns govt
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...