×

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: ஸ்மார்ட் சிட்டி கனவு நிறைவேறுமா?: ஒருங்கிணைந்த பஸ் நிலையம், கூடுதல் மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கை

நாகர்கோவில்: நூற்றாண்டை கொண்டாடும் நாகர்கோவிலை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் நகராட்சி, சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 52 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில் இன்னும் புதிய பகுதிகள் இணைக்கப்பட உள்ளன. அவ்வாறு இணையும் போது மாநகராட்சியின் எல்லை அதிகரிக்கும். மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இங்குள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சில வர்த்தக நிறுவனங்களில் போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை. சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்களில் செல்ல முடிய வில்லை. காலை-மாலை வேளைகளில் முக்கிய சந்திப்புகள் வாகன நெருக்கடியாக திணறி வருகின்றன. பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் அவை ஏட்டளவில் தான் உள்ளன. குறிப்பாக கோட்டார், ஒழுகினசேரி மேம்பாலங்கள் என்பது இன்னும் நிறைவேறாத பணியாக உள்ளது.

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பறக்கை விலக்கு வரை செட்டிக்குளம், சவேரியார் கோயில் சந்திப்பு வழியாக அமைக்கப்பட வேண்டிய மேம்பால பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், கூட இன்னும் அந்த பணிகள் கிடப்பில் உள்ளன. இது போன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒழுகினசேரியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார். தற்போது அந்த திட்டமும் என்னவானது என்று தெரிய வில்லை. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. மாநகரின் வளர்ச்சிக்கு முக்கிய தேவை சாலைகள் தான்.  அதன் அடிப்படையில் தோட்டியோடு சந்திப்பு, சுங்கான்கடை, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் பின்புறம், புத்தேரி, ஒழுகினசேரி, தேரூர், வழுக்கம்பாறை வழியாக 4 வழிச்சாலை வேலைகளை உடனே முடிக்க வேண்டும்.

மற்ற மாநகரில் உள்ளது போல், நாகர்கோவிலில்  மத்திய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (பஸ் போர்ட்) அமைக்க வேண்டும்.  நான்கு வழிச்சாலை பகுதியையொட்டி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையும்பட்சத்தில், நகருக்குள் வாகன நெருக்கடி பெருமளவு குறைய வாய்ப்பு உண்டு என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும். மாநகரின் முக்கிய பகுதிகளில் அடுக்கு மாடி வாகன காப்பகங்கள், அமைக்கப்பட வேண்டும்.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். மாநகரின் முக்கிய பகுதிகளில் பூங்காக்கள், இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். இவற்றை மாநகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும்.

தற்போது மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நடந்து வரும் புத்தன் அணை திட்டத்தை வேகமாக முடிக்க வேண்டும். மாநகரிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் தவறாமல் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய தேசிய, நெடுஞ்சாலை, முக்கிய சந்திப்புகளிலுள்ள மின் கம்பிகள் அகற்றப்பட்டு மின் கேபிள்களாக மாற்றி அமைக்க வேண்டும்.  கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் நகரின் வெளிப்பகுதியில் அமைத்து, நகரின் எந்த பகுதியிலும் திறந்த வெளி ஓடையில்லா பகுதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நகரின் முக்கிய நான்கு வழி, 2 வழிச் சாலைகளில் சாலையின் நடுவே குறுக்கே வாகனங்களும், மக்களும் செல்லாமல் இருக்க ரோட்டின் நடுவில் தடுப்புச் சவர் அமைத்து மரங்களும் நட்டு பாதுகாக்கப்பட வேண்டும்  என்பது ஸ்மார்ட் சிட்டியின் ஒரு அங்கமாகும். இந்த பணிகளை முடிக்க போதுமான நிதி வசதியை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என்றார்.

ஆனால் இப்போது அந்த பணிகள் நடைபெற வில்லை. மத்திய அரசிடம் பேசி, இதற்கான நிதியை பெற வேண்டும். முதலில் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் கொண்ட குழு மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டு, மாநகருக்கு தேவையான பணிகளை திட்டமிட வேண்டும். வியாபாரிகள் உள்பட எந்த தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்க வசதிகள் செய்யப்பட வேண்டும். ஊட்டியில் தாவரவியல் பூங்கா அமைத்திருப்பது போன்று மிகப் பெரிய பூங்கா நகரின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்றனர்.


Tags : Smart City ,bus station ,bridges ,Extra Falls , Smart City, Bus Station, Extra Falls, Demand
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...