×

வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை

மும்பை: வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தபட்டுள்ளார். கடன் வாங்கி ஏமாற்றிய போலி நிறுவனங்கள் மீது விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது. வராக்கடன்கள் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை, கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எடுத்துக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம், திருப்பிச் செலுத்தும் திறன் இல்லாத நிலையிலும், பிற வங்கிகள் கடன் அளிக்க மறுத்த தொழில் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் அளித்ததுதான், இந்த வங்கியின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டிஹெச்எப்எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி அளித்த கடன், தற்போது வராக்கடனாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது. மும்பையில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அவரது மகள்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ராணா கபூர் மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை மும்பையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சில ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது டி.ஹெச்.எப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதுபோன்று கடும் நிதி சிக்கலில் இருந்த சில நிறுவனங்களுக்கு, வேண்டுமென்றே ஆதாயத்தின் அடிப்படையில் அதிகளவில் கடன் கொடுத்து லாபம் அடைந்ததாக ராணா கபூர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ராணா கபூரை அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர்.

‌செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின் அவரை விடுமுறைக்காலச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதையடுத்து வரும் 11ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூர் என்பவர் இன்று மாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் நகருக்கு செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர் டான்டன், ராதா கபூர் மற்றும் ரோஷிணி கபூர் ஆகியோரை தேடப்படும் நபர்களாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


Tags : arrest ,airport ,Rana Kapoor ,founder ,Yes Bank , Roshni Kapoor, Detainee, Rana Kapoor, Arrested, Officers Action
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...