உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பிரசித்தி பெற்ற திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும், தென் காளஹஸ்தி என்றும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு மாசி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து முதல் நாள் விழாவாக பிடிஆர் பண்ணை சார்பில் மண்டகப்படி நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன், பஸ் ஸ்டாண்ட், கோட்டைமேடு, சுங்கசாவடி, தேரடி வழியாக நகர்வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தனர். தினமும் பல மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க திருக்காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை பவனி வந்தனர்.
தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
