×

குடியிருப்பு பகுதியில் சாயகழிவு நீர் தேக்கம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் ஜவகர் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தின் சாயக்கழிவுநீரை, பொது மக்கள் பயன்படுத்தும் பாதையின் நடுவே கழிவுநீர் தொட்டி கட்டி இருப்பு வைத்து அடிக்கடி வெளியேற்றுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மாசு ஏற்படுவதோடு சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 12ஆவது வார்டு ஜவஹர் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 700க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் தனியார் பிரிண்டிங் ஆலை ஒன்று பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலை நிர்வாகத்தினர் ஜவஹர் நகர் தென்புறம் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது சாலையின் நடுவே பெரிய அளவுக்கு தொட்டி ஒன்றை கட்டியுள்ளனர். அத்துடன் பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரித்து இந்த தொட்டி வழியாக நிலத்தடியில் வெளியேற்றும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். பொதுச் சாலையாக இருந்தாலும் இப்பகுதி வழியாக வரும் நுழைவுப் பகுதியை தனியார் நிறுவனத்தினர் கற்களை வைத்து தடை ஏற்படுத்தியுள்ளனர். இது பொது மக்களின் கவனத்துக்கு வராதபடி மறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இந்த தனியார் பிரிண்டிங் நிறுவனத்தினர், சாயக்கழிவுநீரை பொதுவெளியில் வெளியேற்றி வந்தனர். இதுகுறித்து குடியிருப்போர் நலச் சங்கத்தினர், பொது மக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. அங்கு உற்பத்தியாகும் சாயக்கழிவுநீரை லாரி மூலம் இங்கிருந்து வேறு பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

தற்போது இந்த ஆலை நிர்வாகத்தினர் மீண்டும் பொதுச் சாலையில் பகிரங்கமாகத் தொட்டி கட்டி அதில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஏற்பாட்டை செய்துள்ளனர். இதனால், நிலத்தடி நீர் மாசுபட்டு ஆழ்குழாய்களின் மூலம் பெறும் நீர் மாசடைந்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரடியாக கள ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas , Residential area, sewage water, stagnation
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்